29 டிச., 2010

ராடியா, முகேஷ் அம்பானி, ரெட்டி சகோதரர்களுக்கு உதவினார் கேஜி

கொச்சி,டிச,30:முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. அவரது குடும்பத்தினர் பெருமளவில் சொத்துக் குவித்தது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தற்போது நீரா ராடியாவுடன் பாலகிருஷ்ணனுக்குத் தொடர்பு இருந்ததும், அம்பானிகள் இடையிலான கேஜி படுகை வழக்கில் ராடியா தலையிட்டு முகேஷ் அம்பானிக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக உதவியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கே.ஜி.பாலகிருஷ்ணனின் பெயர் முதல் முறையாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரகுபதியை முன்னாள் அமைச்சர் ராசா மிரட்டிய விவகாரத்தில் கெட்டது.

ரகுபதி சொன்னதை முதலில் மறுத்திருந்தார் பாலகிருஷ்ணன். ஆனால் ரகுபதி தனக்கு அனுப்பிய கடிதத்தை அப்படியே பாலகிருஷ்ணனுக்கு அனுப்பி வைத்ததாக முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே கூறியதால் பாலகிருஷ்ணன் பொய் சொன்னது அம்பலமானது.

இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் பர்குவான், கே.ஜி.பாலகிருஷ்ணனின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளார். பாலகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கால கட்டத்தில் அவரது மகள், மருமகன், மாமியார் ஆகியோர் பெருமளவில் சொத்துக்கள் சேர்த்ததாக அவர் பெரிய புகார் பட்டியலை ராஜ்யசபா தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஹமீத் அன்சாரியிடம் கொடுத்தார். அதை அவர் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். உள்துறை அமைச்சகம் இந்தப் புகாரை சிபிஐயிடம் ஒப்படைத்துள்ளது. சிபிஐ இதுகுறித்து ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில் நீரா ராடியாவுக்கும்,பாலகிருஷ்ணனுக்கும் இடையே தொடர்பு இருந்ததையும்,பர்குவான் தனது புகார் கடிதத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

அம்பானிக்கு தரகராக செயல்பட்ட கேஜிபி மகன்
அந்தக் கடிதத்தில் பர்குவான் கூறியுள்ளதாவது...
பாலகிருஷ்ணனின் மகன் பிரதீப். இவர், முகேஷ் அம்பானி, அனில் அம்பானிக்கு இடையிலான கேஜி படுகை காஸ் வழக்கில் மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளார். அவரும், துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி என்பவரும் இணைந்து இந்த மத்தியஸ்த வேலையில் ஈடுபட்டனர்.

3 மூன்றரை ஆண்டு காலம் நீடித்த இந்த வழக்கு 2010ம் ஆண்டு மே 7ம் தேதி முடிவுக்கு வந்தது. அதில், முகேஷ் அம்பானி நிறுவனத்திற்குச் சாதகமாக தீர்ப்பு வெளியானது.

இந்த வழக்கில் நீரா ராடியாவுக்குத் தொடர்பு உள்ளது. இதுகுறித்து அவர் பத்திரிக்கையாளர் வீர் சிங்வியுடன் பேசிய தொலைபேசிப் பேச்சு உறுதிப்படுத்துகிறது.

இதேபோல கேரளாவில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய எஸ்என்சி லாவலின் வழக்கில், சிபிஎம் தலைவர் பினரயி விஜயனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டுள்ளார் கே.ஜி.பாலகிருஷ்ணன்.

கேஜி படுகை வழக்கைப் பொறுத்தவரை பாலகிருஷ்ணனின் மகன் பிரதீப், உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இவர் யூசுப் அலியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 7 முறை துபாய்க்குப் போயுள்ளார். இந்த வழக்கில் பாலகிருஷ்ணனின் பங்கு தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியுள்ளது.

பினய் ராய் விஜயனுக்கு ஆதரவாக செயல்பட்ட கேஜிபி குடும்பம்
பினய்ராய் விஜயன் விவகாரத்தைப் பொறுத்தவரை, அவருக்கு சாதகமாக செயல்படுமாறு பாலகிருஷ்ணன் குடும்பத்தினர் நெருக்குதல் கொடுத்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கை விரைவுபடுத்தி விஜயனுக்கு நிவாரணம் தேடித் தந்துள்ளார் பாலகிருஷ்ணன்.

விஜயனுக்கு ஆதரவாக வழக்கை முடிக்க கோரி பிரதமரின் முதன்மைச் செயலாளராக உள்ள டி.கே.ஏ.நாயர், குடியரசுத் தலைவரின் செயலாளராக உள்ள கிறிஸ்டி பெர்னாண்டஸ் ஆகியோர் இணைந்து கே.ஜி.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த இருவரும் விஜயனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் ஆவர்.

ரெட்டி சகோதரர்களுக்காக தூது போன மருமகன்
இதேபோல கர்நாடக மாநிலத்து ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியும், பாலகிருஷ்ணனின் சகாயத்தை வேண்டியுள்ளார். இதுதொடர்பாக பாலகிருஷ்ணனின் மருமகன் ஸ்ரீஜினை சந்தித்து தனக்கு எதிரான வழக்குகளில் சாதகமான முறையில் நடந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார் என்று பர்குவான் தெரிவித்துள்ளார்.

கேஜி பாலகிருஷ்ணன் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதாலும், அவர் மீதான ஊழல் புகார்கள் மிகக் கடுமையானவையாக இருப்பதாலும், அவருக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. இன்னும் தோண்டத் தோண்ட என்னவெல்லாம் வெளி வரப் போகிறதோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது.

தமிழகத்திலும் அவர் பெருமளவில் சொத்துக்கள் வாங்கிக் குவித்திருப்பதாக புகாரில் கூறப்பட்டிருப்பதால் தமிழக அளவில் அவருக்கு இருந்த தொடர்புகள் குறித்தும் விரைவில் பரபரப்புத் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தட்ஸ் தமிழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராடியா, முகேஷ் அம்பானி, ரெட்டி சகோதரர்களுக்கு உதவினார் கேஜி"

கருத்துரையிடுக