29 டிச., 2010

மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்தது யார்? - சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மோதும் கலைஞரும், ஜெயலலிதாவும்

சென்னை,டிச.30:அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களிடையே தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும், மீண்டும் உயிர் பெறாது. இதுதான் சட்ட நிலைப்பாடு.

சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை. இது 1985ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்திருக்கிறேன்.

2006ல் கருணாநிதி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து அதனை அவரது அரசு தான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி "நான் தான் கொன்றேன்" என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006-லேயே தெளிவுபடுத்தி இருந்தேன். அதையே மீண்டும் கூறுகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

தானே ரத்து செய்த இந்தச் சட்டத்தை, முதலில் என்ன காரணத்துக்காக கொண்டு வந்தார் என்பதையும், பின்னர் எதற்காக தானே கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தார் என்பதையும் ஜெயலலிதா விளக்கினால் நல்லது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்தது யார்? - சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மோதும் கலைஞரும், ஜெயலலிதாவும்"

கருத்துரையிடுக