17 ஜன., 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 2

சில வருடங்களுக்கு முன்பு சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தி ஹிந்து-ஃப்ரண்ட்லைன் அலுவலகத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

பிரமாண்டமான இடம். ஒரு பக்கம் அலுவலகம். இன்னொரு பக்கம் அச்சுக்கூடம். அலுவலகம் அத்துணை அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள். குண்டூசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதி. மனிதத் தலைகள் மட்டும் தெரியும் அரை கேபின் அறைகளிலுருந்து DTP தட்டச்சு செய்யும் சப்தம் மட்டும் தட் தட் என்று வந்துகொண்டிருந்தது.

மறுபக்க அச்சுக் கூடத்திலோ உலகிலேயே அதிக விலையுள்ள வெப் ஆஃப்செட் அச்சு இயந்திரங்கள். ஒரு நிமிடத்திற்கு இத்தனை பிரதிகள் என்று அச்சடித்துத் தள்ளும் வேகம் கொண்டவை அவை. லாரி லாரியாக நியூஸ் பிரிண்ட் காகிதங்களின் ரோல்கள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் லாரி லாரியாக அச்சடிக்கப்பட்ட பிரதிகள் டெலிவரிக்காக வெளியே சென்று கொண்டிருந்தன.

பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருந்தது. ஆனால் அடிமனதில் ஓர் ஏக்கமே மிஞ்சியது. நாம் இவர்களை விட மீடியா உலகில் சுமார் 100 வருடங்கள் பின்தங்கியுள்ளோம் என்ற எண்ணம் தோன்றி, மனதை ஆட்டிப் படைத்தது.

இன்று மீடியாவில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கும் முஸ்லிம் தனவந்தர்கள் முன்பே இதில் கவனம் செலுத்தியிருந்தால் நாமும் இன்று மெயின் ஸ்ட்ரீம் மீடியா எனும் பொது ஊடக உலகில் ஒரளவு சாதித்திருப்போம்.

நாம் அதில் காலடி எடுத்து வைக்காததன் விளைவை இன்று அனுபவித்து வருகிறோம். இன்று மீடியாவில் ஃபாசிசம் வேரூன்றி விட்டது.

ஃபாசிசம் வேரூன்றி விட்ட இன்னொரு முக்கிய துறை நமது அரசு அதிகார வட்டம். இன்று மீடியாவும், அதிகார வட்டமும் இணைந்து முஸ்லிம்களை வேட்டையாடி வருகின்றன.

அதிகார வட்டத்திற்கு முஸ்லிம்களை வேட்டையாட வேண்டுமென்றால் மீடியாவின் தேவை மிக அவசியம். மீடியாவுக்கோ பயங்கரவாதம், தீவிரவாதம் என்று குய்யோ முறையோ என்று பரபரப்பாக்கி காசு பார்ப்பதற்கு முஸ்லிம்கள் வேட்டையாடப்பட வேண்டும். ஆக, மீடியாவும், அதிகார வட்டமும் நகமும் சதையும் போல இணைந்திருந்து இந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றுகின்றன.

இன்று நவீன காலனியாதிக்க சக்திகள் இஸ்லாத்திற்கெதிராகவும், முஸ்லிம்களுக்கெதிராகவும் கச்சை கட்டி களம் இறங்கியிருக்கின்றன. இவர்களுக்கு ஒத்தூதி ஒத்தாசை புரிபவர்கள் சாதாரண பத்திரிகையாளர்கள் அல்ல. நல்ல தரம் மிக்க பத்திரிகையை நடத்துபவர்கள். மீடியாவில் சாதித்தவர்கள். சக்கை போடு போட்டவர்கள். இவர்களெல்லாம் இன்று அறிந்தோ, அறியாமலோ ஃபாசிசத்திற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மீடியா உலகில் முஸ்லிம்கள் – 2"

கருத்துரையிடுக