17 ஜன., 2011

1992-ம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்துக் குண்டுவெடிப்புகளையும் விசாரிப்பதற்கு சுதந்திர புலானாய்வு ஏஜன்சியை நியமிக்க PFI வலியுறுத்தல்

கோழிக்கோடு,ஜன.17:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1992 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் மறுபடியும் விசாரிப்பதற்கான பொறுப்பை சுதந்திரமாக செயல்படும் புலனாய்வு ஏஜன்சியிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும்.

சமீபத்திய தீவிரவாதம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட தற்பொழுது நடந்துவரும் விசாரணை, குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ள சூத்திரதாரிகளை வெளிக் கொணரும் வகையில் போதுமானதாக இல்லை. காரணம், போலீஸ் மற்றும் அதிகார வர்க்கத்தில் நிலவும் மதரீதியான பாரபட்சமாகும்.

குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய உண்மையான குற்றவாளிகள் சங்க்பரிவார்கள்தான் என்ற உண்மை வெளிவந்த சூழலில் மத்திய அரசு மற்றும் மஹாராஷ்ட்ரா, ஆந்திரா மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் அரசுகளும் தீவிரவாத வழக்குகளில் பொய் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச்செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பயங்கரவாதச் செயல்கள் குறித்து புதிதாக வெளியான தகவல்கள் நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தின் மூலம் ஆர்.எஸ்.எஸ்ஸின் பயங்கரவாத செயல்பாடுகளை பகிரங்கப்படுத்தும்.

ஆர்.எஸ்.எஸ்ஸை தடைச் செய்வதன்மூலம் அவ்வியக்கத்தின் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழித்துவிட முடியாது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது.

கடந்த காலங்களில் 3 முறை இவ்வியக்கம் தடைச் செய்யப்பட்ட பிறகும் அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் பா.ஜ.க உள்பட பல்வேறு இயக்கங்களில் செயல்படும் பொழுது இம்முயற்சி வீணானதாகும்.

சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும். மேலும் இந்த கருப்புச் சட்டத்தில் கைதாகி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டாக்டர் பினாயக் சென்னை உடனடியாக விடுதலைச்செய்ய வேண்டும்.

கேரள மாநிலத்தில் கைதுச் செய்யப்பட்ட டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்கிய அம்மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிச் செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் இத்தீர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுக் கூட்டம் வரவேற்கிறது.

கேரள மாநில உயர்நீதிமன்றம் டாக்டர் ரெனீஃபிற்கு ஜாமீன் வழங்கிய நிலையில் கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசு ரெனீஃப் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டி ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

கேரள மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடிமக்களுடைய உரிமைகளின் பாதுகாவலனாகவும், சிறுபான்மை மக்களின் ஆபத் பாந்தவனாகவும் வேடமிட்டுக் கொண்டிருந்தது. ஆனால், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இந்த சமூக அமைப்பை அடக்கி ஒடுக்கிவிட நடந்த முயற்சிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் மீது சித்திரவதைகளை கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் அதன் உண்மையான நிறம் வெட்டவெளிச்சமானது.

ஜனநாயக உரிமைகளை நசுக்கும் விதமாக அரசு நிர்வாகமும், போலீசும் நடந்துக்கொண்ட பொழுது அமைதியை விரும்பும் இவ்வியக்கத்தின் அரசியல் சட்டரீதியான உரிமைகளை பாதுகாக்கும் விதமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் உச்சநீதிமன்றம், பாப்புலர் ஃப்ரண்டின் மீது சுமத்தப்படும் தீவிரவாத குற்றச்சாட்டிற்கு எவ்வித ஆதாரமுமில்லை எனக் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றம் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கும் காரணத்தினால், ஏன் அந்த இயக்கம் தீவிரவாத இயக்கமாக இருந்தபோதிலும் கூட அந்த குறிப்பிட்ட தீவிரவாதச் செயலில் ஈடுபடாதவரை அவர் மீது குற்றஞ்சுமத்த முடியாது. இத்தீர்ப்பு பொய் வழக்குகளில் கடுமையான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நம்பிக்கையின் வெளிச்சத்தைத் தருகிறது.

டெல்லியில் அல்நூர் மஸ்ஜிதை இடித்த டெல்லி வளர்ச்சி ஆணையத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இடித்த இடத்தில் மீண்டும் மஸ்ஜிதை கட்டிகொடுக்க வலியுறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசியத் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கெ.எம்.ஷெரீஃப், துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
Source:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "1992-ம் ஆண்டிற்கு பிறகு நடந்த அனைத்துக் குண்டுவெடிப்புகளையும் விசாரிப்பதற்கு சுதந்திர புலானாய்வு ஏஜன்சியை நியமிக்க PFI வலியுறுத்தல்"

கருத்துரையிடுக