பஹ்ரைன்,ஜன.23:பஹ்ரைன் வருகை தந்த தமிழக NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு )-ன் துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.M.G.K.நிஜாமுதீன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களையும் வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் (BIFF)-தமிழ்நாடு பிரிவு கடந்த 15-ம் தேதி அன்று இரவு 8 மணி அளவில் BIFF அரங்கத்தில் வைத்து நடத்தியது.
நிகழ்ச்சியின் ஆரம்பமாக முகைதீன் அவர்கள் வரவேற்புரை நிகத்தினார். இந்நிகழ்ச்சிக்கு பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரத்தின் துணைத்தலைவர் அப்துல் சத்தார் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் என்பது ஜாதி , மத ,மொழி பேதமின்றி பஹ்ரைன் வாழ் இந்திய மக்களுக்காக சேவை செய்து வரும் அமைப்பு என்றும் பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் வாயிலாக இதுவரை செய்த சமூகப் பணிகள் குறித்தும் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட மற்றும் குறும்பட தயாரிப்பாளரும், பாபரி மஸ்ஜித் விஷயத்தில் கடந்த 20 வருடங்களாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடியவருமான திரு.பாரதி கிருஷ்ணா குமார் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.
அவர் தனது உரையில் இந்துத்துவவாதிகள் ஆட்சியில் இல்லை என்றாலும் இந்துத்துவம் இன்னும் ஆட்சிப் பீடத்தில் தான் இருக்கின்றது என்றும் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாவிடினும் தாழ்த்தப்பட்டோருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான ஃபாசிச மனோபாவம்தான் அரசின் எல்லா துறைகளிலும் ஆட்சியில் இருக்கின்றது என்றார்.
இந்துத்துவ சக்திகள் சாதாரண குடிமகன்களின் எண்ணங்களுக்கு விலங்கிட்டு, கேடிகளுக்கு ஆட்சி அதிகாரத்தையும், சாதாரண குடிமக்களை எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக கேடிகளாகவும் ஆக்குகிறது என்பதையும் அழகாக விளக்கினார்.
சினிமாவிலும், அரசியலிலும் தேசப்பற்றை பற்றி பேசும் அனைவரும் தேசியவாதியுமல்ல; அரசியலில் இஸ்லாமியர்களின் நண்பர்களாக காட்டிகொள்ளும் அனைவரும் நண்பருமல்ல என்ற விழிப்புணர்வை இஸ்லாமியர்கள் அடைய வேண்டும் என்றார். மேலும் இந்துத்துவவாதிகள் தேசியக் கொடியை ஏந்தி வரும் முஸ்லிம்களை கண்டு பயப்படுவதை பற்றியும் இந்த தேசத்தை பீடித்துள்ள இந்துத்துவவம் என்ற நோயை விரட்ட அறிவு ரீதியான யுத்தத்திற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று அழகிய நடையில் எளியமுறையில் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு)ன் தமிழக துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரர் M .G .K .நிஜாமுதீன் அவர்கள், இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களை ஒற்றை வார்த்தைகளை கொண்டு பின்னடைய செய்கிறார்கள் என்றார். சுதந்திரத்திற்கு பின்பு இஸ்லாமியர்கள் மீது சுமத்திய "பிரிவினைவாதிகள்" என்ற வார்த்தைகளை துடைத்தெறிய நாம் நாற்பது வருடங்கள் எடுத்துகொண்டோம். அடுத்து சுமத்திய "தீவிரவாதி" என்ற களங்கத்தை துடைக்க மேலும் இருபது வருடங்கள் என நாம் அவர்களை விட 60 வருடங்கள் பின் தங்கி விட்டோம் என்றார்.
இஸ்லாமியர்களிடையே உள்ள அறியாமையையும், ஒற்றுமையின்மையையும் ஆணித்தரமாக சாடிய அவர் எதிரிகளை வெற்றி பெற பத்திரிகை மற்றும் அரசியலில் இஸ்லாமியர்கள் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.
இந்திய முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளமைக்கு காரணம் அறியாமையும், பரந்த சிந்தனை இல்லாமையும் , பரந்த தொடர்பில்லாமையும் தான் என்றும் முஸ்லிம்களைக் காட்டிலும் குறைவான சதவீதம் உள்ள பிற சமுதாயத்தவர்கள் எல்லா உரிமைகளும் பெற்று வாழும் போது முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு காரணம் முஸ்லிம்களிடம் உள்ள ஒற்றுமையின்மைதான் என்றும் முஸ்லிம்கள் எல்லா சமூகத்துடனும் பரந்த தொடர்பு உள்ளவர்களாகவும், தனக்குள் ஒற்றுமையுடனும் செயல்பட வேண்டும் என்று அழகிய முறையில் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த BIFF ன் செயற்குழு உறுப்பினர் முஹம்மத் அலி , Nagercoil Brothers Assosciation ன் தலைவர் காலித் மற்றும் BIFF ன் பொருளாளர் ரஷீத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் இறுதியாக சாலிம் அவர்கள் நன்றியுரை வழங்க ஒற்றுமை கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. நிகழ்ச்சியை முகைதீன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 100 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள்.
2 கருத்துகள்: on "'ஆட்சியில் இல்லை என்றாலும் இந்துத்துவம் இன்னும் ஆட்சிப் பீடத்தில் தான் இருக்கின்றது' - BIFF வரவேற்பு நிகழ்சியில் எழுத்தாளர் பாரதி பேச்சு"
Nazeer இந்த தேசத்தை பீடித்துள்ள இந்துத்துவவம் என்ற நோயை விரட்ட அறிவு ரீதியான யுத்தத்திற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும் INSAAILA
பாசிசம் அடியோடு வீழ்த்தப்பட வேண்டும் எனில் அனைவரும் சேர்ந்துப் போராட வேண்டும்!
கருத்துரையிடுக