30 ஜன., 2011

கர்நாடக தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு சிபிஐ விசாரணை கோரும் மொய்லி

பெங்களூரு,ஜன.30:கர்நாடகத்தில் தேவாலயங்கள் மீது ஆளும் பாரதிய ஜனதா மற்றும் ஹிந்து அமைப்புகள் நடத்திய தாக்குதலிலிருந்து நீதிக்குழு அவர்களை விடுவித்து உண்மையை மறைத்துள்ளது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

"கடந்த 2008ல் நடந்த தேவாலய தாக்குதலுக்கும் ஆளும் அரசு, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று நீதிபதி சோமசேகர விசாரணை கமிஷன் கூறியதை தொடர்ந்து "சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை வெளியில் கொண்டுவர முடியும்" என்று மொய்லி கூறினார்.

பிப்ரவரி 2010ல் இந்த கமிஷனின் இடைக்கால அறிக்கையில் இத்தாக்குதலுக்கு பின்னால் உள்ள அமைப்புகளில் பஜ்ரங்தளும் ஒன்று என்றும் பஜ்ரங்தள், ஸ்ரீராம் சேனா, விஹெச்பி ஆகிய அமைப்பினர் தான் தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு காரணம் என்ற கருத்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் இறுதி அறிக்கையில் கிறிஸ்தவ மனுதாரர்கள் அச்சம் தெரிவித்திருந்த அரசியல் வாதிகளுக்கும், பாஜக, சங்பரிவார் அமைப்புகளுக்கும், ஆளும் கட்சிக்கும் இந்த தாக்குதலுக்கும் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எந்த தொடர்பும் இல்லை. வரையறுக்கப்படாத அமைப்புகளை சேர்ந்த அடிப்படைவாதிகளாலேயே இத்தாக்குதல் நடந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இடைக்கால அறிக்கையும் இறுதி அறிக்கையும் ஒன்றாக வாசிக்கப்பட வேண்டும். கமிஷன் அறிக்கை தந்திருக்கிறதே தவிர, உண்மையை மறைக்க முடியாது. மாநில அரசு இவ்விஷயத்தில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று மொய்லி கூறினார்.

பாஜக இந்த முடிவை வரவேற்றுள்ளது, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளமும் 'மாநில அரசு தான் விரும்பியதை பெற்றுவிட்டது' என்று கூறியுள்ளது. கிறிஸ்தவ சமுதாய தலைவர்களும் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் அமைப்புகளின் பெயர்கள் குறிப்பிடப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்நாடக தேவாலயங்கள் மீதான தாக்குதலுக்கு சிபிஐ விசாரணை கோரும் மொய்லி"

கருத்துரையிடுக