19 ஜன., 2011

சர்வதேச எரிசக்தி புரட்சி காலக்கட்டத்தின் அவசியம் -பான் கீ மூன்

அபுதாபி,ஜன.19:சர்வதேச அளவிலான எரிசக்தி புரட்சி காலக்கட்டத்தின் அவசியம் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விலையில் எரிபொருளை அளிக்கும் விதமான சர்வதேச புரட்சிதான் தேவை என பான் கீ மூன் குறிப்பிட்டார். அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் எரிசக்தியின் உபயோகம் 20 சதவீதம் அதிகரிக்கும் சூழலில் இது மிகவும் அத்தியாவசியாமனது என பான் கீ மூன் குறிப்பிட்டார்.

அபுதாபி நேசனல் எக்ஸ்பிஸன் செண்டரில்(அட்நெக்) நேற்று முன்தினம் துவங்கிய உலக எதிர்கால எரிசக்தி உச்சிமாநாட்டின் துவக்க நாளில் முக்கிய உரை நிகழ்த்தினார் அவர்.

வளர்ந்துவரும் நாடுகளுடைய வளர்ச்சியுடன் எரிசக்தி பிரச்சனையும் மிக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறும். தற்பொழுது வளர்ந்துவரும் நாடுகளில் 300 கோடி மக்கள் உணவு தயாரிக்க விறகு உள்பட இதர எரிபொருளை பயன்படுத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பதற்கொப்ப எரிபொருள் உபயோகமும் அதிகரிக்கும். அப்பொழுது எரிபொருள் தேவைக்காக அதிக அளவில் மரங்கள் வெட்டப்படும். இதனால் பாரம்பரிய எரிசக்தி சுரண்டலுக்கு உட்படும். சுற்றுச்சூழல் பாதித்து பருவநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இம்மக்களுக்கு மாற்று எரிபொருளுக்கான வழிகளை அளிப்பதன் மூலம் இத்தகைய பிரச்சனைகளை பரிசீலிக்கலாம். இது எரிசக்தி புரட்சியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என பான் கீ மூன் தெரிவித்தார்.

சர்வதேச ஐ.நா உருவாக்கிய உயர்மட்டக்குழு இரண்டு லட்சியங்களை முன்வைத்தது. ஒன்று நவீன எரிபொருளை உலகில் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்தல். இரண்டாவது, உலகில் தற்போதைய எரிபொருளின் அளவை 40 சதவீதம் அதிகரித்தல் ஆகியனவாகும்.

இந்த லட்சியங்களை அடைவதற்கு அடுத்த இருபது ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 35 பில்லியன் டாலர்(129 பில்லியன் திர்ஹம்) தேவையாகும். இது பெரிய தொகையாக தெரிந்தாலும் சர்வதேச எரிசக்தித் துறையில் ஒவ்வொரு ஆண்டும் முதலீடுச் செய்யப்படும் தொகையில் 3 சதவீதம் மட்டுமே.

நமது முன்னுரிமைகளை அடையாளங்கண்டு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். 'எல்லோருக்கும் எரிபொருள்' என்பதை உறுதிச் செய்யும் எதிர்காலத்திற்கு தற்பொழுது முக்கியத்தும் அளிக்க வேண்டியுள்ளது.

எதிர்காலத்திற்கான அபுதாபியின் முயற்சிகளை பாராட்டிய பான் கீ மூன் யு.ஏ.இயின் தலைநகரம் பிரபலமான வளர்ச்சி மையமாக மாறிவிட்டது என சுட்டிக்காட்டினார்.

முன்னர் 'எதிர்கால எரிசக்தி வழிகளை கண்டறிவோம்' என்ற முழக்கத்துடன் கூடிய உச்சிமாநாட்டையும், கண்காட்சியையும் யு.ஏ.இயின் இளவரசரும், யு.ஏ.இ ஆயுதப் படையின் துணை கமாண்டருமான ஷேக் முஹம்மது பின் ஸாயித் அல் நஹ்யான் துவக்கி வைத்தார்.

பருவநிலை மாற்றம், நீண்டகாலத் தேவைக்கான சுத்தநீர், குடிநீர் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளில் உலகம் இன்று சவால்களை சந்திப்பதாகவும் இவற்றை முறியடிக்க சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டுமெனவும் ஷேக் முஹம்மது பின் ஸாயித் அல் நஹ்யான் தெரிவித்தார்.

ஐஸ்லாந்து அதிபர் ஒலாஃபர் ராக்னர் க்ரிம்ஸன், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, போர்ச்சுகல் பிரதமர் ஜோஸ் ஸோக்ரட்ஸ் கார்வாலோ பின்றோ டிசவுசா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா, ஜோர்ஜியா பிரதமர் நிக்கோலஸ் கிலோரி, ஸ்வீடன் ராணி விக்டோரியா, லக்ஷம்பர்க் இளவரசர் க்வில்லோமெ ஆகியோர் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அபுதாபிக்கு வருகைத் தந்துள்ளனர். பல்வேறு நாடுகளின் அரசக் குடும்பங்கள், உயர் அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள் என பல்வேறு பிரமுகர்கள் இம்மாநாட்டின் துவக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஜெனரல் ஷேக் முஹம்மது பின் ஸாயித் மற்றும் யு.ஏ.இயின் துணை பிரதமர் ஷேக் மன்சூர் பின் ஸாயித் அல் நஹ்யான் பாதுகாவலர்களாக செயல்படும் மஸ்தரின் சார்பில் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.

எதிர்கால எரிசக்தியின் ஆதாரத்தை கண்டறிவதற்கு ஆட்சியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தனியார் துறைகள் ஆகியோரின் கூட்டு முயற்சிகளுக்கு உருவம் கொடுப்பதுதான் நான்காவது எரிசக்தி மாநாட்டின் நோக்கம் என உச்சிமாநாட்டின் வரவேற்புரையில் மஸ்தரின் சி.இ.ஒ டாக்டர்.சுல்தான் அஹ்மத் அல் ஜாபிர் தெரிவித்தார்.

33 நாடுகளைச் சார்ந்த 25 ஆயிரம் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டில் எரிசக்தி கொள்கை, சுற்றுப்புறச் சூழலுக்கு கேடுவராத போக்குவரத்து, பசுமை மையங்கள், முதலீடும் நிதி ஆகிய தலைப்புகளில் விவாதம் நடைபெறும். இம்மாதம் 20 ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டில் உலக எதிர்கால எரிசக்தி கண்காட்சியும், உலக எதிர்கால சுற்றுச்சூழல் கண்காட்சியும் நடைபெறுகிறது.

வளைகுடா நாடுகளிலேயே மிகப்பெரிய கண்காட்சி மையமான அட்நெக்கில் 40 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவைக் கொண்ட இடத்தில் மிகப் பிரமாண்டமான கண்காட்சியாக இது அமையும். 40 நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் இக்கண்காட்சியில் பங்களிப்பு செய்கின்றனர். இக்கண்காட்சிக்கு இரண்டரை லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்வதேச எரிசக்தி புரட்சி காலக்கட்டத்தின் அவசியம் -பான் கீ மூன்"

கருத்துரையிடுக