12 ஜன., 2011

இந்திய-பாகிஸ்தான் உறவில் மையப் பிரச்னை பயங்கரவாதம்: எஸ்.எம்.கிருஷ்ணா

புதுடெல்லி,ஜன.12:இந்தியாவுக்கு கவலை அளிக்கும் மையப் பிரச்னை பயங்கரவாதம். இது குறித்து பாகிஸ்தான் அக்கறையோடு செயல்பட வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய பிரச்னையான பயங்கரவாதத்தைக் குறித்து பாகிஸ்தான் மேலும் அக்கறையோடும் ஆழ்ந்த உணர்வோடும் அணுகவேண்டும். பாகிஸ்தான் அவ்வாறு செய்தால்தான் இரு நாடுகளிடையே உள்ள உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப இயலும். பயங்கரவாத எதிர்ப்பைக் கிடப்பில் போட்டுவிட முடியாது, என்றார் கிருஷ்ணா.

மேலும் அவர் கூறியது: பாகிஸ்தானுடன் நமக்கு நட்பு தேவை. ஆனால் பயங்கரவாத செயல்களுக்காக அந்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளங்களை அகற்ற பாகிஸ்தான் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதிகளின் பயிற்சி குறித்தும், பயிற்சி பெறும் இடங்கள் குறித்தும் இந்தியா விரிவான தகவல்கள் அளித்திருக்கிறது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பிப்ரவரி 6, 7 தேதிகளில் சார்க் மாநாடு பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறுகிறது. அப்போது இந்திய-பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்கள். அவசியமானால் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியை சந்திக்கவும் தயாராக உள்ளதாக கிருஷ்ணா கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய-பாகிஸ்தான் உறவில் மையப் பிரச்னை பயங்கரவாதம்: எஸ்.எம்.கிருஷ்ணா"

கருத்துரையிடுக