23 ஜன., 2011

ஜோர்டானில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அரசு எதிர்ப்பு பேரணி

அம்மான்,ஜன.23:ஜோர்டான் அரசு ராஜினாமாச் செய்ய வேண்டுமெனக்கோரி ஜோர்டானின் பல்வேறு நகரங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது.

விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றின் காரணமாக துயரத்தில் ஆழ்ந்த மக்கள் வீதியில் இறங்கி போராடத் துவங்கியுள்ளனர். விலைவாசியை குறைப்பதற்காகவும், வேலைவாய்ப்புகளுக்காகவும் அரசு சமீபத்தில் பன்னிரண்டு கோடியே ஐம்பது லட்சம் டாலருக்கான பேக்கேஜ் அறிவித்திருந்தது. ஆனால், இத்தொகை போதுமானதாக இல்லை எனவும், பிரதமர் ஸாமிர் ரிஃபாஈ ராஜினாமாச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தலைநகரான அம்மானிலும், இதர முக்கிய நகரங்களிலும் கண்டனப் போராட்டங்கள் நடைப்பெற்றன. துனீசிய அதிபர் ஜைனுல் ஆபிதீன் பின் அலியை அந்நாட்டு மக்கள் புரட்சியின் மூலம் நாட்டைவிட்டு வெளியேற்றியது ஜோர்டான் மக்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இடதுசாரிகளும், இஸ்லாமிய அமைப்புகளும், தொழிலாளர் யூனியன்களும் இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஜோர்டான் மக்களின் கொந்தளிப்பு உடனடியாக மாற்றத்தை கொண்டுவரும் என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

துனீசியாவில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்த 26 வயது இளைஞனின் தற்கொலை மரணம் தீப்பொறியாக மாறி சர்வாதிகாரி பின் அலியின் ஆட்சியை கவிழ்த்தது. அதனைத் தொடர்ந்து இதர சில அரபு நாடுகளிலும் போராட்டங்களும் தற்கொலைகளும் நிகழ்ந்தன.

ஜோர்டானில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரிஃபாயி நடைமுறைப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் மக்களின் கோபத்திற்கு காரணமானது. அத்தியாவசியப் பொருட்களுக்கு அளிக்கப்படும் வரிக்குறைப்பை நீக்குவதுதான் அந்த பொருளாதார சீர்திருத்தம்.

பிரதமரை மன்னர் அப்துல்லாஹ் நேரடியாக நியமிப்பதை கைவிட்டுவிட்டு ஜனநாயக ரீதியாக பிரதமரை தேர்வுச் செய்யவேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மன்னர் வழிகாட்டியாக மட்டும் இருந்தால்போது. நாட்டின் அன்றாட காரியங்களை செயல்படுத்த முனையக்கூடாது என ஜோர்டானில் மிகப்பெரிய எதிர்கட்சியான இஸ்லாமிக் ஆக்‌ஷன் ஃப்ரண்டின் தலைவர் ஹம்ஸா மன்சூர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜோர்டானில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற அரசு எதிர்ப்பு பேரணி"

கருத்துரையிடுக