27 ஜன., 2011

இஸ்ரோ மீதான தடையை நீக்கியது அமெரிக்கா

வாஷிங்டன்,ஜன.27:இஸ்ரோ மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களுக்கு கடந்த 1998ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.

1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் போக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதையடுத்து இஸ்ரோ உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது. அன்று முதல் இந்த தடை நீடித்து வந்தது. இந்த நிலையில் தற்போது 13 ஆண்டு கால தடையை நீக்கியுள்ளது அமெரிக்கா.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தபோது அவருக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையே இதுதொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி தற்போது இந்தியாவின் இஸ்ரோ மீதான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் கேரி லாக் கூறுகையில், இரு நாட்டு பாதுகாப்பு உறவுகளிலும் இன்றைய தினம் ஒரு மைல் கல்லாகும். இஸ்ரோ மற்றும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான தடைகள் அகலுகின்றன. இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை என்றார்.

இஸ்ரோ தவிர, பாரத் டைனமிக்ஸ் லிமிட்டெட், ஆயுத ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம், பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி ஆய்வகம், ஏவுகணை ஆய்வு மற்றும் வளர்ச்சி வளாகம், திட நிலை இயற்பியல் ஆய்வகம், திரவ எரிபொருள் என்ஜின் சிஸ்டம் மையம், திட எரிபொருள் விண்வெளி பூஸ்டர் நிலையம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ஆகியவற்றின் மீதான தடைகளும் அகன்றுள்ளன.

தடை அமலில் இருந்து வந்ததால், மேற்கண்ட நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்பு வைத்துக் கொள்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்தன. இந்திய நிறுவனங்களும் இதனால் பாதிக்கப்பட்டு வந்தன. லைசன்ஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் கெடுபிடியுடன் அமல்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை தேவையில்லை.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரோ மீதான தடையை நீக்கியது அமெரிக்கா"

கருத்துரையிடுக