10 ஜன., 2011

சூடான்:ஏகாதிபத்தியத்தின் கனவு நிறைவேறுகிறது

நாட்டை விட்டு வெளியேறிய பிறகும் சுயநிர்ணய உரிமை என்ற பெயரால் ஏகாதிபத்திய சக்திகள் தங்களது லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிதான் நேற்று சூடானில் நடந்த மக்கள் விருப்பவாக்கெடுப்பு. தங்களது சுய ஆதாயங்களை நிறைவேற்றுவதற்கு துணைபுரியக் கூடிய அல்லது மதரீதியான காரணங்களினால் தங்களுக்கு சாதகமான பகுதிகளை தனி நாடுகளாக மாற்ற ஒரு இறையாண்மை மிக்க நாட்டின் புவியியல் ரீதியிலான அகண்டத் தன்மையை நேர்கூறாக பிளந்து தங்களது லட்சியங்களை நிறைவேற்றத் துடிக்கும் ஏகாதிபத்திய சக்திகளின் முயற்சிகளை வெறும் பார்வையாளர்களாக மட்டும் கண்டுக்கொண்டிருக்கக்கூடிய நிர்பாக்கியகரமான சூழலுக்கு சில நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.

தெற்கு சூடானில் பிற்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம்தான் தனிநாடு கோரிக்கைக்கு உரமூட்டியது. அதற்கு முன்பு மேற்கத்திய நாடுகள் மற்றும் இஸ்ரேலின் உதவியுடன் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட பிரிவினை கிளர்ச்சி போதிய பலனைப் பெற்றுத்தரவில்லை.

அபியாவில் சூடானின் 80 சதவீத அளவிலான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏகாதிபத்திய சக்திகளின் கழுகு கண்கள் சூடானை மீண்டும் வட்டமிட ஆரம்பித்தன. சூடானில் கார்த்தூமில் கொடுமை இழைக்கப்படுகிறது என்ற கதையை பரப்பி உள்ளூர் மக்களை தூண்டிவிட்டனர். ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றுவது என்பது ஏகாதிபத்திய சக்திகளுக்கு எளிதான காரியமாகும்.

தற்பொழுது நடைபெறும் விருப்ப வாக்கெடுப்பில் பிரிவினைக்கு ஆதரவாகத்தான் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்பதில் சூடானின் அதிபர் முதல் வடக்கு சூடானின் பெரும்பாலான மக்களுக்கும் சந்தேகமில்லை. ஆனால், ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நாடு என்ற அந்தஸ்தை சூடான் இழக்கும். மேலும், முஸ்லிம்-கிறிஸ்தவர்களுக்கிடையே இதுநாள்வரை நிலவிவந்த மத நல்லிணக்கமும் தகரும்.

நைல் நதியிலிருந்து வரும் தண்ணீரின் பெரும்பகுதி தெற்கு சூடானிற்கு கிடைத்துவரும் சூழலில் வடக்கு சூடானின் விவசாயத்தை இது பெரிதும் பாதிக்கும்.

இஸ்ரேலுக்கு செங்கடலில் மேலும் ஆதிக்கத்தை உறுதிச் செய்யும். தெற்கு சூடானில் அமையப்போகும் புதிய அரசில் கிறிஸ்தவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும். "நாங்கள் ஆளப்பட வேண்டியவர்களல்லர்! ஆளப் பிறந்தவர்கள்! என்ற சிலுவைப்போர் கால முழக்கத்தை கொடுமை என்ற பெயரால் ஏகாதிபத்திய சக்திகள் சூடானில் தங்களது லட்சியத்தை எளிதாக நிறைவேற்றுகிறார்கள் என்று புரிந்துக்கொண்ட தொலைநோக்கு சிந்தனையையுடைய டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி போன்ற அறிஞர்களும், தலைவர்களும் சூடான் பிரிக்கப்படுவதை எதிர்க்கின்றனர்.

தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற ஏகாதிபத்தியத்தின் காட்டுநீதியால் இனிமேலும் இனவெறியின் பெயரால் எத்தனை பிரிவினைகளை இந்த உலகம் சந்திக்கப் போகிறதோ?
விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சூடான்:ஏகாதிபத்தியத்தின் கனவு நிறைவேறுகிறது"

கருத்துரையிடுக