27 ஜன., 2011

துணை கலெக்டர் எரித்துக் கொலை: சிபிஐ விசாரணையைக் கோரும் உறவினர்

மும்பை,ஜன.27:கலப்பட டீசல், பெட்ரோல் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, சோதனையிடச் சென்ற கூடுதல் ஆட்சியர் சோனாவானே எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சோனாவானேவின் உறவினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொல்லப்பட்ட மகாராஷ்டிர மாநில அதிகாரி சோனாவானே நாசிக் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்தார்.

கலப்பட பெட்ரோல், டீசல் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்த மோசடி கும்பல் பற்றி தகவல் திரட்டவும் அவர்களை கைது செய்யும் நோக்கிலும் சோனாவானே செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் அவரது தனிச் செயலர் மற்றும் டிரைவர் சென்றனர்.

சோதனைக்காக சென்ற இடத்தில் கலப்பட பெட்ரோல் விற்பனைக் கும்பலுடன் தொடர்புடைய சிலர், யாரும் எதிர்பார்க்காத வகையில் சோனாவானேவை எரித்துக் கொன்றனர். சம்பவம் நடந்தபோது தனி உதவியாளரும், டிரைவரும் உடன் இருந்துள்ளனர். இந்நிலையில் சோனாவானே மட்டும் குறிவைத்து கொல்லப்பட்டது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்றார் சோனாவானேவின் மைத்துனர் ஆனந்த் தானி.

மொபைல் போனில் சோனாவானேவுடன் யார், யார் தொடர்பு கொண்டு பேசினார்கள், பேசியது என்ன என்பதையெல்லாம் கண்டறிந்தால் குற்றவாளிகள் பிடிபட சாத்தியம் இருக்கிறது என்றும் தானி தெரிவித்தார்.

இந்நிலையில், சோனாவானே கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உணவுப்பொருள் வினியோகத் துறையையே பொறுப்பாக்க வேண்டும் என மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கட்சே குற்றம் சாட்டியுள்ளார்.

சோனாவானே கொலைச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என குடியரசுக்கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துணை கலெக்டர் எரித்துக் கொலை: சிபிஐ விசாரணையைக் கோரும் உறவினர்"

கருத்துரையிடுக