29 ஜன., 2011

சர்வாதிகாரத்திற்கு சாவுமணி

பட்டினியையும், வறுமையையும் பொறுக்கவியலாமல் துனீசியாவில் பொவைசி என்ற இளைஞர் தன்னைத்தானே தீவைத்துக் கொளுத்தி தற்கொலை செய்துக் கொண்டார். அவர் பற்றவைத்த நெருப்பின் ஜூவாலைகள் ஜனநாயகத்தின் பெயரால் கபடநாடகமாடும் முஸ்லிம் நாடுகளின் சர்வாதிகாரிகளின் சிம்மாசனத்தை எரிக்கத் துவங்கியதன் மனோகரமான ஆவேசமான செய்திகள் தினந்தோறும் அந்நாடுகளிலிருந்து வந்துக் கொண்டிருக்கின்றன. அபயம் தேடி அந்நிய நாடுகளுக்கு வெருண்டோடும் கொடுங்கோலர்களை பொறுத்தவரை பாவி செல்லுமிடமெல்லாம் பாதாளம் என்ற சூழல்தான் உருவாகியுள்ளது.

துனீசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதின் பின் அலி பாரிஸிற்கு தப்பியோடும் வழியில் காலிடறி விழுந்ததோ சவூதிஅரேபியாவில்.

எகிப்தில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் 99.9 சதவீத வாக்குகளைப் பெற்று அதிபராக தொடர்ந்த ஹுஸ்னி முபாரக்கின் கட்சிக்கு கடந்த தேர்தலிலும் அதே சதவீத வாக்குகளை கிடைத்தன. ஆனால், அவரது மகனும், இளவரசனுமான ஜமால் முபாரக் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். எங்கு சென்றார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.

யெமனில் அதிபர் பெயர் பலகையை மாட்டிவிட்டு ஏகாதிபத்தியத்திற்கு கைப்பாவையாக செயல்பட்டுவரும் கொடுங்கோலாட்சியின் சொந்தக்காரர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் மக்கள் கோபக்கனலிலிருந்து தப்பிப்பதற்கு வழியை தேடிக் கொண்டிருக்கிறார்.

சிரியா, அல்ஜீரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளிலும் தேர்தல் நாடகங்கள் மூலம் குடும்ப ஆட்சியை நடத்திவரும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிராக் மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

அரபு உலகில் வறுமையிலும் பசியிலும் உழலும் மக்களிடமிருந்து போராட்டத்தீயின் ஜுவாலை உருவாக இவ்வளவு காலம் தாமதித்ததுதான் ஆச்சரியமாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன், பிரான்சு போன்ற பல்லுபோன கிழட்டு ஏகாதிபத்திய சிங்கங்களின் ஆதரவுடன் அந்நாடுகளில் வாழும் அப்பாவி மக்களின் ஜனநாயக உரிமைகளை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் காலில் போட்டு மிதித்தாலும், அவர்கள் கொடும் பசியினாலும், வறுமையினாலும் வாடினாலும் அவர்களை அடக்கி ஒடுக்கி ஆளலாம எனக் கருதி சுகபோக வாழ்வில் மூழ்கியிருந்த சர்வாதிகாரிகளின் கனவு தகர்ந்து போனதன் காட்சிகளைத்தான துனீஸ், கெய்ரோ, ஸன்ஆ, அம்மான், அல்ஜீர்ஸ் வீதிகளில் மக்களின் போராட்டங்களாக நாம் காண்கிறோம்.

முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை நெறியான இஸ்லாம்தான் அந்த சமூகத்தின் ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நடக்கும் போராட்டங்களுக்கு உந்துசக்தியாக திகழ்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சர்வாதிகாரிகளுக்கு சேவகம் புரியும் ஊடகங்கள் சல்லிக் காசுகளுக்காக ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் திரள் போராட்டங்களை பயங்கரவாதம் என முத்திரைக்குத்தின.

அரபு உலகின் ஏகாதிபத்திய வாதிகளுக்கும், அவர்களை ஆதரிக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும், பொய்களை பரப்பும் ஊடகங்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் அரபுலக வீதிகளில் நடைபெறும் ஆவேசமான மக்கள் திரள் போராட்டங்கள் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்வாதிகாரத்திற்கு சாவுமணி"

கருத்துரையிடுக