29 ஜன., 2011

அல்பராதி வீட்டுக் காவலில்: எகிப்தில் போராட்டம் தீவிரம்

கெய்ரோ,ஜன.29:எகிப்து நாட்டில் மக்கள் போராட்டம் வலுவடைந்து வரும் சூழலில் அப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் ஆஸ்திரியாவிலிருந்து வருகைத் தந்த முன்னாள் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான அல்பராதி வீட்டை போலீஸ் சுற்றி வளைத்துள்ளது. கெய்ரோவுக்கு வருகைத்தந்த அல்பராதி எகிப்தில் நடக்கும் மக்கள் திரள் போராட்டத்திற்கு தலைமைத் தாங்கப் போவதாகவும், போராட்ட பேரணியில் கலந்துக்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவுடன் மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை என்ன விலைக்கொடுத்தாவது சந்திப்போம் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த தினங்களில் மிகப் பிரம்மாணடமான போராட்டங்கள் களமாக மாறிய தஹ்ரீர் சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

போராட்டம் வலுத்துவரும் நிலையில் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா, சூயஸ் நகரங்களில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய போராட்டத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அரசுக்கெதிரான போராட்டத்திற்கு அதிகமாக உபயோகிகப்பட்ட இணையதளம், மொபைல் எஸ்.எம்.எஸ் சேவைகள் செயலிழந்துள்ளன.

போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகும், ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கல்வீச்சில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகித்தனர்.

கெய்ரோ மட்டுமின்றி, சூயஸ், மன்ஸவ்ரா, ஸர்கியா ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

துனீசியாவில் நடந்த மக்கள் புரட்சி அளித்த உந்துதலால் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவரும் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சிக்கெதிராக மக்கள் கொதித்தெழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அல்பராதி வீட்டுக் காவலில்: எகிப்தில் போராட்டம் தீவிரம்"

கருத்துரையிடுக