27 பிப்., 2011

கர்ப்பிணிகள் உயிரைப் பறித்த கெட்டுப்போன குளுக்கோஸ்- 13 பேர் பலி :ராஜஸ்தானில் நடந்தது விபரீதம்

ஜோத்பூர்,பிப்.27:ராஜஸ்தானில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளுக்கு, சத்துக்காக குளுக்கோஸ் மருந்தை ஏற்றியபோது, அதிகளவு ரத்தப் போக்கு ஏற்பட்டு 13 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கெட்டுப் போன குளுக்கோஸ் திரவத்தை ஊசி மூலம் அவர்களுக்கு ஏற்றியது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உமைத் என்ற அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கர்ப்பிணி பெண்கள் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சத்துக்காக குளுக்கோஸ் மருந்து ஏற்றப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே, அவர்களுக்கு அளவுக்கு அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தாலும், 13 பேர் பரிதாபமாக இறந்து போயினர். மேலும், நான்கு பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து டாக்டர்கள் தரப்பில் கூறுகையில்,"கடந்த 23ம் தேதி வரை, அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால், ஒன்பது பேர் இறந்தனர். அடுத்த சில நாட்களிலேயே, பலி எண்ணிக்கை 13 ஐ தொட்டதால், குளுக்கோஸ் மருந்தில் தான் கோளாறு இருப்பதாக நினைத்து, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அதைச் செலுத்துவதை நிறுத்தினோம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13கர்ப்பிணிகள் இறந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

இதையடுத்து, மருத்துவ உயரதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தினர். இதில், கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ், கெட்டுப்போனது என்பது தெரியவந்தது. இதை செலுத்தியதால் தான், அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது என்பதும் முதல் கட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

சம்பந்தபட்ட குளுக்கோஸ் திரவம், இந்தூரைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மீதும், இதை விற்பனை செய்த உள்ளூர் மருந்து விற்பனை மையம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மருந்து விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். இருந்தாலும், மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஜோத்பூர் போலீஸ் கமிஷனர் பூபேந்திர குமார் கூறியதாவது: "ராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, விசாரணையை துவக்கியுள்ளோம். 5,000 பாட்டில் குளுக்கோஸ், இந்த நிறுவனம் மூலம் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இதுவரை விற்பனை செய்யப்படாத குளுக்கோஸ் பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை ஆய்வக சோதனைக்கும் பரிந்துரை செய்துள்ளோம். சோதனை முடிவுகள் வெளியான பின், உண்மையான காரணம் என்ன என்பது தெரிய வரும்." இவ்வாறு பூபேந்திர குமார் கூறினார்.

உமைத் மருத்துவமனை கண்காணிப்பாளர் நரேந்திர சங்கானி கூறுகையில், "எங்கள் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், சம்பந்தபட்ட மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் உள்ளூர் டீலர் ஆகியோருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளோம்" என்றார்.

இதற்கிடையே, உமைத் மருத்துவமனைக்கு வந்த, மாநில மருத்துவ அதிகாரிகள், அந்த மருத்துவமனையின் பிரசவ அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையத்தை தற்காலிகமாக மூடும்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு சார்பில் விசாரணை நடத்தவும், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்ப்பிணிகள் உயிரைப் பறித்த கெட்டுப்போன குளுக்கோஸ்- 13 பேர் பலி :ராஜஸ்தானில் நடந்தது விபரீதம்"

கருத்துரையிடுக