3 பிப்., 2011

2013-ஆம் ஆண்டு ராஜினாமாச் செய்வேன் - யெமன் அதிபர்

ஸன்ஆ,பிப்.3:அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம் தீவிரமடைந்து வரும் சூழலில் ஆட்சியின் காலாவதி முடிவடையும் 2013-ஆம் ஆண்டில் பதவி விலகப்போவதாக அந்நாட்டு அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்துள்ளார்.

தனது ஆட்சியின் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரவில்லை எனவும், தனது மகனுக்கு அதிபர் பதவியை அளிக்கப்போவதில்லை எனவும் 30 ஆண்டுகாலமாக யெமனில் சர்வாதிகார ஆட்சியை நடத்திவரும் அப்துல்லாஹ் ஸாலிஹ் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்கள் இன்று யெமன் நாட்டு தலைநகரான ஸன்ஆவில் ஸாலிஹிற்கு எதிராக போராட்டம் நடத்தவிருக்கும் சூழலில் பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார் அவர். போராட்டத்தை தணிப்பதற்கான தந்திரம்தான் ஸாலிஹின் அறிவிப்பு என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாராளுமன்றம் மற்றும் ஆலோசனை கமிட்டியின் கூட்டத்தை திடீரென கூட்டினார் அவர். 1978-ஆம் ஆண்டு வடக்கு யெமனின் அதிபராக பதவியேற்றார் ஸாலிஹ். 1990-ஆம் ஆண்டு வடக்கு யெமனும், தெற்கு யெமனும் ஒன்றிணைந்த பொழுதிலும் அதிகாரத்தில் தொடர்ந்து வருகிறார். நாட்டின் விருப்பம்தான் முக்கியம் எனவும், போராட்டங்களையும், பேரணிகளையும் எதிர்கட்சியினர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமெனவும் ஸாலிஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஊட்டச்சத்துக் குறைவு ஆகியவற்றைக் கண்டித்து எதிர்கட்சி தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளும் அரசுக்கெதிராக போராட்டத்தில் குதித்துள்ளன.

முக்கிய எதிர்கட்சியான இஸ்லாமிஸ்ட் இஸ்லாஹ் கட்சி ஸாலிஹின் அறிக்கையை வரவேற்றுள்ளது. அதே வேளையில் பேரணியை ரத்துச்செய்யப் போவதில்லை என அக்கட்சியின் செயலாளர் முஹம்மது அல் ஸஅதி தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தத்தான் பேரணியை நடத்துவதாகவும், அது சமாதான முறையில் நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதிபர் பதவியின் காலாவதியை இரண்டுவருடம் நீட்டிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த ஜனவரியில் ஸாலிஹ் முயன்றார். 2006 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பும் பதவி விலகுவதாக ஸாலிஹ் அறிவித்த பொழுதிலும் மீண்டும் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "2013-ஆம் ஆண்டு ராஜினாமாச் செய்வேன் - யெமன் அதிபர்"

கருத்துரையிடுக