3 பிப்., 2011

வறுமையின் வாசலில் வசந்தம்!

மதீனாவில் அது ஒரு பஞ்சக் காலம். எங்கும் பட்டினி. வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஒரு பெண் தன் இரு பெண் குழந்தைகளுடன் ஒரு நாள் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் வீட்டுக்கு வந்து தங்கள் பசிக்கு ஏதாவது தருமாறு கேட்டாள்.

விசுவாசிகளின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கள் வீடு முழுவதும் தேடினார் - வந்த விருந்தாளிகளுக்கு ஏதாவது கொடுக்க! ஒன்றும் கிடைக்கவில்லை. அன்னைக்கு அளப்பரிய சங்கடம். மீண்டும் தேடினார். இறுதியில் மூன்று பேரீச்சம் பழங்களைக் கண்டெடுத்தார்.

"இதனைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை" என்று கூறி அந்த மூன்று பேரீச்சம் பழங்களையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார் அன்னையரின் அன்னை.

பசியில் எரிகின்ற மூன்று வயிறுகளுக்கு மூன்றே மூன்று பேரீச்சம் பழங்கள்!

ஒவ்வொன்றையும் ஒவ்வொரு குழந்தைக்குக் கொடுத்து விட்டு அந்தப் பரிதாபத் தாய் ஒரு பழத்தை தன் வாயில் போட்டாள். யானைப் பசிக்கு சோளப்பொறி போல கிடைத்த ஒரு பேரீச்சம் பழத்தை உடனே உண்டு விட்டு பசியடங்காமல் தாய் முன் கை நீட்டின அந்த இரண்டு பிஞ்சுகளும்.

உடனே அந்தத் தாய் தன் வாயிலிருந்து அந்தப் பழத்தை எடுத்து இரண்டாகப் பிய்த்து தன் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தாள்!

வறுமையின் பிடியில் இருந்த அந்தக் குடும்பத்தின் தலைவன் வறுமையைப் போக்க துணை நிற்கவில்லை. எனவே இரண்டு பிஞ்சுகளையும் அள்ளிக் கொண்டு அந்தத் தாய் வீதிக்கு வந்தாள். கிடைத்த உணவை அவள் நீதமாகப் பங்கு வைத்தாள். பால் மனம் மாறா பிஞ்சுகள் பசியடங்காமல் கை நீட்டியபொழுது தன் பசியைப் பொருட்படுத்தாது உமிழ்நீர் பட்ட பேரீச்சம் பழத்தைப் பிய்த்து அந்தச் சின்ன வாய்களில் திணித்தாள்.

இந்த நெகிழ்ச்சிமிகு நிகழ்வை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அன்னையரின் அன்னையாம் ஆயிஷா நாயகி(ரலி).

நேசமிகு நபியவர்கள் வீட்டுக்கு வந்தபொழுது நெஞ்சைப் பிழியும் இந்த நிகழ்வைக் கூறினார் அன்னை ஆயிஷா (ரலி). அருமை நாயகம்(ஸல்) அவர்கள் அதற்கு இவ்வாறு பதிலளித்தார்கள்:

"அந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து அல்லாஹ் அவளை நரகத்தை விட்டும் காப்பாற்றி விட்டான்."

பலவீனமும், வறுமையும் ஒன்று சேரும்பொழுது நன்மையின் வாயில்கள் திறந்ததைத்தான் நாம் இங்கே கண்டோம். மூன்று பேரீச்சம் பழங்களைக் கொண்டு பலவீனமான அந்தத் தாயால் அற்புதம் நிகழ்த்த முடிந்தது. பலவீனர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை கூறினார்கள்:
"உங்களில் ஒருவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அதனைக் குழி தோண்டிப் புதைக்காமல், ஏசாமல், ஆண் குழந்தைகளுக்கு அவளை விட முன்னுரிமை கொடுக்காமல் அழகிய முறையில் வளர்த்தெடுத்தால் அவருக்கு சுவர்க்கம் நிச்சயம்." (ஆபூதாவூத்)

மூலம்:தேஜஸ் மலையாள நாளிதழ்
தமிழில்:MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "வறுமையின் வாசலில் வசந்தம்!"

பெயரில்லா சொன்னது…

"அந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து அல்லாஹ் அவளை நரகத்தை விட்டும் காப்பாற்றி விட்டான்."

rompa arumayaana katurai. pakirnthamaikku nandri!

கருத்துரையிடுக