3 பிப்., 2011

வருமான வரிவிலக்கு உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு

டெல்லி,பிப்.3:தற்போது தனி நபர் வருமான வரி உச்சவரம்பு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உள்ளது. பெண்களுக்கு இது ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது.

பண வீக்க விகிதம் அதிகரித்து விட்டது. ஆகவே வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு வருமான வரிச் சட்டத்துக்கு பதில் நேரடி வரிகள் சட்டம் என்ற புதிய சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தற்போது உள்ள வருமான வரி உச்சவரம்பை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்த அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த உயர்வு அடுத்த ஆண்டு (2012-13) ஏப்ரல் மாதம் முதல்தான் அமலாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி ரூ.2 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும்.

இந்த நிலையில், இந்த ஆண்டே வருமான வரி உச்சவரம்பில் சிறிது உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 28-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார். அதில் இந்த உயர்வு குறித்து அறிவிக்க அவர் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி மிக அதிகமாக உயர்ந்து இருக்கும் பண வீக்கத்தை கவனத்தில் கொண்டு இருக்கிறார். அத்துடன் பெரும்பாலானோருக்கு அகவிலைப்படி கிடையாது என்பதையும் அவர் கருத்தில் கொண்டு இருக்கிறார். ஆகவே தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் நிச்சயம் உயர்வு இருக்கும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணவீக்கம் பொது மக்களின் வருமானத்தை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறது. ஆகவே நேரடி வரிகள் சட்டத்தில் உள்ள சில சலுகைகளை இந்த பட்ஜெட்டிலேயே அளித்து சாமானிய மக்களுக்கு பயன்கிடைக்கச் செய்ய அவர் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வருமான வரிவிலக்கு உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு"

கருத்துரையிடுக