3 பிப்., 2011

ராசாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி!

டெல்லி.பிப்:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேற்று கைதுச் செய்யப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் தனது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது. இதை நீதிமன்றம் ஏற்று அவரை சிபிஐ காவலுக்கு அனுப்பியது.

அதே போல முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரையும் 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது நீதிமன்றம்.

நேற்று கைதான ராசா, சித்தார்த் பெகுரியா, சந்தோலியா ஆகியோர் இரவு முழுவதும் சிபிஐ அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ராசா உள்ளிட்ட 3 பேர் மீதும் 8 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ராசாவின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணை தகவல்களையும் கைது நடவடிக்கைக்கு ஆதாரமாக சி.பி.ஐ. காட்டியுள்ளது.

இவை தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களின் பணப் பறிமாற்றமும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.

மேலும் அப்ரூவராக மாறிவிட்ட ஒருவர் கொடுத்துள்ள வாக்குமூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை வெளிப்படுத்தும் மிக முக்கிய ஆதாரமான சி.பி.ஐ. வசம் உள்ளது. ராசாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் அடைந்த பண லாபங்கள் குறித்த தகவலை அவர் விவரமாகத் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடங்கிய 2007ம் ஆண்டு முதல் அவை வழங்கப்பட்ட 2008ம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் ராசாவுடன் தொடர்புள்ளவர்களின் பணப் பரிமாற்றங்கள் சி.பி.ஐ. வசம் சிக்கியுள்ளன.

மேலும் நிரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் கிடைத்த தகவல்களும் கைதுக்குக் காரணமாகியுள்ளன.

இந்நிலையில் இன்று பிற்பகலில் ராசா, சித்தார்த்த பெகுரியா, சந்தோலியா ஆகிய மூவரும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றமான பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது மூவரிடமும் ஒரே நேரத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் மூவரையும் 5 நாட்கள் தங்கள் காவலில் அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

மேலும் சிபிஐ தாக்கல் செய்த கைது அறிக்கையில், ராசாவின் நடவடிக்கைகளால் நாட்டுக்கு ரூ.22,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக கடைசி நேரத்தில் விதிகளை மாற்றி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கினார் ராசா. இந்த இரு நிறுவனங்களுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டார்.

இதில் ஸ்வான் நிறுவனம் ரூ.530 கோடி மட்டுமே கொடுத்து ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. ஆனால், இதில் 40 சதவீத பங்குகளை மட்டுமே ரூ.4,200 கோடிக்கு விற்றுள்ளது. இதனால் இதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது.

ராசா மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 13(1), 13(1டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ராசா வெளியில் இருந்தால், விசாரணைக்கு இடையூராக இருப்பார் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

இதை ராசாவின் வழக்கறிஞர் எதிர்த்தார். ராசாவை கைது செய்ததே தவறு என்று அவர் வாதிட்டார். அவர் வாதாடுகளையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்கான கட்டணத்தை நிர்ணயித்தது ராசா அல்ல. அவர் ஓடி ஒளிந்துவிடாமல் விசாரணைக்கு ஆஜாராகி வருகிறார். ஆனால், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதாகக் கூறி அவரை சிபிஐ கைது செய்ததாகக் கூறுவது சரியல்ல என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சைனி 30 நிமிடங்களில் தீர்ப்பளிப்பதாக அறிவித்தார். பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, ராசாவை 5 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து ராசா உள்ளிட்ட 3 பேரையும் சிபிஐ தனது தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றது. 5 நாள் விசாரணைக்குப் பின் வரும் திங்கள்கிழமை மூவரும் மீண்டும் இதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 10ம் தேதி வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு இன்னும் ஒரு வாரமே கால அவகாசம் உள்ளது.

இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு, சி.பி.ஐ. நேற்று திடீரென அழைப்பு விடுத்தது. கைது செய்யப்பட்டுள்ள ராசா உள்ளிட்ட 3 பேரிடமும் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தலாம் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.

இதை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதனால் இனி அடுத்தக்கட்ட விசாரணை நடக்கும் போது சி.பி.ஐ. அதிகாரிகளும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ஒன்றாக இருந்து விசாரணை நடத்துவர்.

அதேசமயம், வழக்கமாக இதுபோல கைதாகி சிறைக்கு அனுப்பப்படும் சமயத்தில் அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சு வலி, ராசாவுக்கும் வருமா என்பதும் தெரியவில்லை. சிபிஐ விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்பு அவர் சென்னையில் மருத்துவமனையில் சேர்ந்து திடீரென உடல் நலப் பரிசோதனைகளை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ராசாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி!"

கருத்துரையிடுக