6 பிப்., 2011

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5

தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் போன்ற பிரபலமான அமெரிக்க நாளிதழ்கள் அதிக செல்வாக்கு படைத்தவை என்று சென்ற தொடரில் கண்டோம்.

தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்தான் சதாம் ஹுஸைனைப் பற்றிய "கொடுமையான" செய்திகளை கதை கதையாகத் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அதன் செய்தியாளர் ஜுடித் மில்லர் என்பவர்தான் WMD எனப்படும் பேரழிவு தரும் ஆயுதங்கள் (Weapon of Mass Destruction) ஈராக்கில் இருப்பதாக பல சிறப்புக் கட்டுரைகளை எழுதித் தள்ளினார். அந்தக் கட்டுரைகள் அனைத்தும் வண்டி வண்டியாக பொய் மூட்டைகளைத் தாங்கி வெளிவந்தது.

ஏனெனில் அப்படி எந்தப் "பேரழிவு" ஆயுதமும் ஈராக்கிடம் இல்லை, ஜார்ஜ் புஷ் இந்தப் பொய்யைச் சொல்லியே ஈராக் என்னும் அருமையான பழம் பெரும் கலாச்சாரங்களையும், வரலாறுகளையும் தன்னகத்தே கொண்டிருந்த நாட்டைக் குண்டுகள் போட்டு சீரழித்தார் என்று இப்பொழுது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஜார்ஜ் புஷ்ஷின் இந்தப் பொய்களைச் சொல்வதற்கு அனைத்து ஊடகங்களும் உதவி புரிந்தன. முண்டியடித்துக் கொண்டு முன் வந்தன. அதில் தலையாய பங்கு வகித்தது தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்தான்.

மிகப் பரவலாகவும், எளிதாகவும் வீட்டுத் திண்ணை வரை மக்களைச் சென்றடையக் கூடியவை இரண்டே ஊடகங்கள்தான்.ஒன்று தொலைக்காட்சிச் சானல்கள். இன்னொன்று சினிமா.

தொலைக்காட்சிச் சானல்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டால் 70 முதல் 80 சதவீத நிகழ்ச்சிகளை அமெரிக்காதான் "சப்ளை" செய்கின்றது.

சினிமா ஸ்டூடியோக்களை எடுத்துக்கொண்டால் ஹாலிவுட்தான் உலகம் முழுவதும் சென்றடையக்கூடிய படங்களை அதிகமதிகம் எடுத்துத் தள்ளுகிறது. மொத்த உலக சினிமா கட்டுப்பாடும் ஹாலிவுட்டின் கையில்தான் உள்ளது என்று கூடச் சொல்லலாம்.

ஹாலிவுட் தயாரிக்கும் படங்கள் அத்தனையும் ரத்தம் உறைய வைக்கும் வன்முறை, பாலியல் வக்கிரங்களைக் கொண்ட ஆபாசம், காதைக் கிழிக்கும் இசை ஆகியவைகளை மையமாகக் கொண்டே அமைகின்றன.

அங்கே உருவாகும் படங்கள் அனைத்தும் அமெரிக்காவின் பலத்தை நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பரப்பக்கூடியதாகவே படைக்கப்படும். அமெரிக்காவின் ஆதிக்க மனப்பான்மையையும், அதன் குள்ளநரிக் கொள்கைகளையும் அடிப்படையாகக் கொண்டே அமையும். "உலக போலீஸ்" என்னும் அதன் அகம்பாவ எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.

கோரி வைடல் (Gore Vidal) என்ற புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் குறிப்பிடுவது போல் சொல்ல வேண்டுமென்றால் அமெரிக்காவின் கொள்கை, கோட்பாடு என்றால் அது "கார்ப்பரேட் அமெரிக்கா" வின் கொள்கை, கோட்பாடு என்றே பொருள்படும்.

சுருக்கமாகப் பார்த்தால், ஒரு சதவீத மக்களால் நிர்வகிக்கப்படும் ஏகாதிபத்தியத்தை (Autocracy) அல்லது திருட்டு எதேச்சாதிகாரத்தை (Kleptocracy) இந்த மிருக பலமுள்ள ஊடகங்களான தொலைக்காட்சியும், ஹாலிவுட் சினிமாப் படங்களும் பரப்பி வருகின்றன.

அந்த ஒரு சதவீத மக்கள் கேபிடல் ஹில்லிலும் இருப்பார்கள். வெள்ளை மாளிகையிலும் இருப்பார்கள். உச்ச நீதிமன்றத்திலும் இருப்பார்கள். அவர்களே மொத்த ஊடகங்களையும் கட்டுப்படுத்துவார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
MSAH

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மீடியா உலகில் முஸ்லிம்கள் – 5"

கருத்துரையிடுக