23 பிப்., 2011

லிபியா:ராணுவம் திரிபோலியில் குண்டுவீசித் தாக்கியது, சாலைகளில் பிணக்குவியல்

திரிபோலி,பிப்.23:அரசுக்கெதிராக மக்கள் எழுச்சி தீவிரமடைந்துள்ள சூழலில் லிபியாவின் தலைநகரான திரிபோலியில் ராணுவம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

ஹெலிகாப்டர்களும், போர் விமானங்களும் குண்டுவீசித் தாக்கியதைத்தொ டர்ந்து ஏராளமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என மனித உரிமை ஆர்வலர்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறந்தவர்களின் உடல்கள் சாலையோரங்களில் சிதறிக் கிடக்கின்றன. 400-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை படுகொலைச்செய்த லிபியாவின் சர்வாதிகார கொடுங்கோன்மை ஆட்சியை எதிர்த்து இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் லிபியா தூதர்கள் ராஜினாமாச் செய்துள்ளனர்.

இதற்கிடையே, "நான் திரிபோலியில்தான் இருக்கிறேன்" என ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபி தொலைக்காட்சியில் தோன்றினார். அதிகாரத்திலிருந்து மாறுவதற்கு நான் விரும்பவில்லை. வெனிசுலாவுக்கு நான் செல்லவில்லை. ஊடகங்களில் குரைக்கும் நாய்களை நம்பாதீர்கள் என கத்தாஃபி தெரிவித்தார். போராட்டத்தை அடக்கி ஒடுக்குவோம் என அவர் மிரட்டல் விடுத்தார்.

கத்தாஃபி ராஜினாமாச் செய்யவேண்டுமென ஐ.நாவின் லிபியா தூதர் இப்ராஹீம் தப்பாஸி கோரிக்கை விடுத்துள்ளார். லிபியாவின் அமெரிக்க தூதர் அலி அட்ஜாலியும் இதனை வலியுறுத்தியுள்ளார். கத்தாஃபி வெனிசுலாவுக்கு வந்ததாக வெளியான செய்தியை வெனிசுலாவின் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரஸ் இஸரா மறுத்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கூட்டுப் படுகொலைச் செய்த ராணுவ நடவடிக்கையை கண்டித்து ஐ.நாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் கவலை தெரிவித்துள்ளார்.

லிபியாவின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு எண்ணை நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை திரும்ப அழைத்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டத்தைக் குறித்து சர்வதேச தளத்தில் விசாரணை மேற்கொள்ளவேண்டுமென ஐ.நாவின் மனித உரிமைக்கான ஹைக்கமிஷனர் நவி பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

மனிதத் தன்மையற்ற தாக்குதலை லிபியா நிறுத்தவேண்டுமென பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார். லிபியாவிலிருந்து தங்கள் நாட்டு குடிமக்களை அழைப்பதை வெளிநாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

எகிப்தின் எல்லையில் கூடுதலான ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. எகிப்திற்கு திரும்ப வருபவர்களுக்கு சிகிட்சைக்காக சிறப்பு மருத்துவமனைகள் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளன.

தென்கொரிய எண்ணை நிறுவனம் தங்களது தொழிலாளர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பத் துவங்கியுள்ளது. இவர்களில் 100 பேர் பங்களாதேஷைச் சார்ந்தவர்களாவர்.

ஊடகங்களுக்கு அதிகமான கட்டுப்பாடுகளை லிபிய அரசு விதித்துள்ளதால் கூடுதலான செய்திகள் அந்நாட்டிலிருந்து வெளிவரவில்லை.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "லிபியா:ராணுவம் திரிபோலியில் குண்டுவீசித் தாக்கியது, சாலைகளில் பிணக்குவியல்"

Unknown சொன்னது…

Sarvaadihaaram oru pothum vendradillai.

கருத்துரையிடுக