22 பிப்., 2011

கோடிகளைப் புரட்ட விடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்

தேர்தல் வந்தால் போதும் நிதி வசூலை ஆரம்பித்துவிடுகின்ற கட்சிகள். அது எங்கிருந்துதான் இந்தக் கட்சிகளுக்கு பணம் கொட்டுகிறதோ... ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிகளைப் புரட்டிவிடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்.

காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற கட்சிகளின் ஆண்டு வருமானம், பன்னாட்டு நிறுவனங்களை விட அதிகமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

இந்த கட்சிகளின் வருமானங்கள், அது தொடர்பாக அக்கட்சிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள் போன்ற விவரங்களைத் திரட்டி வெளியிட்டுள்ளது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் என்ற அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இவற்றைப் பெற்று வெளியிட்டுள்ளது அந்த
அமைப்பு.

2007-08 மற்றும் 2008-09ம் ஆண்டுகளில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ள வருமானம் ரூ.717 கோடியே 69 லட்ச ரூபாய்!

பாஜக மட்டும் இளைத்ததா என்ன... ஆட்சியில் இல்லாவிட்டாலும் அக்கட்சி ரூ.343 கோடியே 8 லட்சம் ஈட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ரூ.251 கோடியே 76 லட்சமும், ஏழைப் பங்காளர்களின் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி ரூ.122 கோடியே 53 லட்ச ரூபாயும், சமாஜ்வாடி கட்சி ரூ.71 கோடியே 30 லட்சம், தேசியவாத காங்கிரஸ் ரூ.57 கோடியே 40 லட்சமும், ராஷ்டிரிய ஜனதா தளம் ரூ.6 கோடியே 20 லட்ச ரூபாய் வருமானமும் ஈட்டியுள்ளன.

தேசிய கட்சிகளில் மிகவும் குறைவாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து இரண்டு கோடியே 40 லட்ச ரூபாய் மட்டுமே வருமானம் பெற்றுள்ளது.

2007-08ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2008-09ம் ஆண்டில் பி.எஸ்.பி.,யின் வருமானம் 161 சதவீதமும், தேசியவாத காங்கிரஸ் வருமானம் 130 சதவீதமும், காங்கிரஸ் வருமானம் 125 சதவீதமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி கூப்பன்களை விற்பனை செய்ததன் மூலம் மட்டும், 598 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

இந்த இரு ஆண்டுகளில் பா.ஜ., 297 கோடியே 70 லட்ச ரூபாயும், பி.எஸ்.பி., 202 கோடியே 94 லட்ச ரூபாயும், காங்கிரஸ் 72 கோடியே 9 லட்ச ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, ஒருவரிடமிருந்தும் 20 ஆயிரத்திற்கும் அதிகமாக நன்கொடை பெறாத நிலையிலும், அக்கட்சி பெற்ற மொத்த நன்கொடையின் மதிப்பு 202 கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது
குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, அதிக சொத்துக்கள் உடைய கட்சி காங்கிரஸ். இக்கட்சிக்கு, 611 கோடியே 77 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சிக்கு 286 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பிலும், பா.ஜ.,வுக்கு 260 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பிலும் சொத்துக்கள் உள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள், நன்கொடையாக கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரி வழங்கியுள்ளன. பாரத் எலெக்டோரல் டிரஸ்ட் அதிகபட்சமாக 18 கோடி ரூபாயை கட்சிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளது. இந்நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு 11 கோடி ரூபாயும், பாஜகவுக்கு 6 கோடி ரூபாயும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 1 கோடி ரூபாயும் வழங்கியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, டாரன்ட் பவர் லிமிடெட் நிறுவனம் காங்கிரஸ், பி.ஜே.பி.,க்கு தலா 4 கோடியே 50 லட்ச ரூபாயும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கோடி ரூபாயும் அளித்துள்ளது.

வீடியோகான் இன்டஸ்டிரியல் லிமிடெட் நிறுவனம் 7 கோடியே 50 லட்ச ரூபாயும், அதானி அண்டு முந்த்ரா போர்ட் அண்டு எஸ்.இ.இசட்., லிமிடெட் நிறுவனம் 6 கோடி ரூபாயும் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளன.

இவை வெளியில் தெரிந்த கணக்கு மட்டுமே. மறை முகமாக அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் ஆதாயம் இதைவிட இருமடங்கு இருக்கும் என்கிறது இந்த தகவல்களை வெளியிட்டுள்ள அமைப்பு.

இப்படியெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு தனியார் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது எதற்காக? ஜனநாயகத்தை தழைக்கச் செய்யவா... ம்ஹூம்!

ஆட்சியிலிருக்கும் கட்சி மூலம் அதிக காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும், எதிர்க்கட்சியாக உள்ள முக்கிய கட்சி அந்த காரியங்களைக் கெடுக்காமல் இருக்கவும்தான்!
தட்ஸ்தமிழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோடிகளைப் புரட்ட விடுகின்றன தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும்"

கருத்துரையிடுக