15 பிப்., 2011

வறுமையின் கோரத்தால் புதை குழிகளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்தும் எகிப்திய மக்கள்

பிப்.15:எகிப்து நாட்டின் சர்வாதிகாரிகளான பாரோவாக்கள் தங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களே தவிர அந்நாட்டில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களைப்பற்றி அவர்களுக்கு எவ்வித கவலையுமில்லை.

ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சி மக்கள் எழுச்சியின் காரணமாக முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அடித்தட்டு மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் வெளிவரத் துவங்கியுள்ளன.

ப்ரஸ் டி.வியின் நேரடி ரிப்போர்ட் எகிப்தின் லட்சக்கணக்கான மக்கள் சமாதிகளுக்கிடையே வாழ்ந்துவரும் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இதுமட்டுமல்லாமல் சேரிகளில் வாழும் மக்களின் நிலைமையும் படுமோசமாக உள்ளது.

அடித்தட்டு மக்கள் வாழும் கல்லறைகளுக்கு மக்கள் எழுச்சியின் மையமாக விளங்கிய தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து ரொம்ப தூரம் செல்ல தேவையில்லை. தலைநகரான கெய்ரோவில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான 50 கல்லறை மைதானங்கள் உள்ளன. இவைதான் வசிப்பிடம் இல்லாமல் துயரத்தில் ஆழ்ந்துள்ள லட்சக்கணக்கான எகிப்தியர்களின் வாழ்விடமாகும். இங்கு வாழும் மக்கள் தங்கள் இறந்துபோன உறவினர்களை புதைப்பதற்காக வருபவர்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடைகளில் தங்களின் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். இறந்துபோன உறவினர்களை புதைக்க வருபவர்களிடமிருந்து சிறிதளவிலான பணமும், ரொட்டியும், பழங்களும், அரிசியும் இவர்களுக்கு கிடைக்கின்றன.

எகிப்தில் 40 சதவீதம் மக்கள் வறுமையில் வாடுவதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் படிப்படியாக குறைக்கப்பட்டன. மக்கள் எழுச்சிப் போராட்டம் நடைபெற்ற 18 தினங்களில் முபாரக் தனது சொத்துக்களையெல்லாம் ஐரோப்பிய வங்கிகளிலிருந்து பாரசீக வளைகுடா நாடுகளில் மாற்றிவிட்டதாக ஒரு செய்தி கூறுகிறது.

முபாரக் தனது 30 ஆண்டுகால ஆட்சியில் 40 லிருந்து 70 பில்லியன் டாலர்களை ஊழல் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. முபாரக்கின் மகன்களான கமால் மற்றும் ஆலா ஆகியோர் பில்லியனர்களாக திகழ்கின்றனர். இவர்களுக்கு லண்டனில் நவநாகரீகமான வீடுகள் உள்ளன. முபாரக் மனைவியின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்கள் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
presstv


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வறுமையின் கோரத்தால் புதை குழிகளுக்கு மத்தியில் வாழ்க்கையை நடத்தும் எகிப்திய மக்கள்"

கருத்துரையிடுக