7 பிப்., 2011

எகிப்து:போ​ராட்டத்திற்​கு மத்தியில் நடைப்பெற்ற திருமணம்

கெய்ரோ,பிப்.7:எகிப்தில் அந்நாட்டு சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம் மக்கள் எழுச்சியின் சின்னமாக விளங்கிவருகிறது. இந்நிலையில் எகிப்து நாட்டைச் சார்ந்த டாக்டர்.அஹ்மத் ஸஃபானும், அவருடைய மணப்பெண் அவ்லா அப்துல் ஹமீதும் திருமணம் செய்துக்கொண்ட நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 28-ஆம் தேதி துவங்கிய மக்களின் எழுச்சிமிகு போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 லட்சம் பேரை சாட்சியாக வைத்து இந்த ஜோடியினரின் திருமணம் இனிதே நிகழ்ந்தேறியது.

இதுக்குறித்து திருமணமான தம்பதியினர் தெரிவிக்கையில், "நாங்கள் கடந்த 10 தினங்களாக தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் எங்களது நண்பர்களுடன் கலந்துக் கொண்டிருக்கிறோம். இத்தருணத்தில்தான் நாங்கள் இங்கே திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தோம்" என கூறினர்.

மணமகனான டாக்டர் ஸஃபான் தெரிவிக்கையில், "எனது பெற்றோர்கள் இத்திருமணத்தில் கலந்துக் கொள்வார்களா? என நான் கவலைப்பட்டேன். ஆனால், எகிப்தியர்களும், அரபுக்களும் எங்கள் திருமணத்திற்கு சாட்சியம் வகித்துள்ளனர். நாங்கள் உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்களை பெற்றிருக்கிறோம்." என்றார்.

மணமகளான அவ்லா கூறுகையில், "நான் இவ்விடத்தை விட(தஹ்ரீர் சதுக்கம்) எங்களது திருமணம் நடைபெறுவதற்குரிய சிறந்த இடமாக வேறு எதனையும் கருதவில்லை. நான் இந்த தஹ்ரீர் சதுக்கத்தில் திருமணம் புரிந்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் இந்த சதுக்கம் எங்களது தேசத்தின் மறுபிறப்புக்கு சாட்சியம் வகிக்கிறது" என தெரிவித்தார்.

டாக்டர் ஸஃபானும், அவ்லாவும் டாக்டர் அம்ர் காலித் அவர்களின் 'தி க்ரியேட்டர் ஆஃப் ஃப்யூச்சர்'(எதிர்காலத்தை உருவாக்குபவர்கள்) என்ற மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் லாபநோக்கமற்ற அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஃபார்மோகாலஜிஸ்டான டாக்டர் ஸஃபான் இவ்வமைப்பைச் சார்ந்த 2240 பேர்களால் 'தி க்ரியேட்டர் ஆஃப் ஃப்யூச்சர்' அமைப்பின் கீழ் செயல்படும் போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

'தி க்ரியேட்டர் ஆஃப் ஃப்யூச்சர்' என்ற அமைப்பில் 50 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் தற்போதைய மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். மேலும் மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெறும் இவ்வேளையில் கெய்ரோவின் பல்வேறு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி:கல்ஃப் நியூஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்து:போ​ராட்டத்திற்​கு மத்தியில் நடைப்பெற்ற திருமணம்"

கருத்துரையிடுக