7 பிப்., 2011

செவி சாய்ப்போம்

சமீபத்தில் நண்பர் ஒருவர் கூறிய குட்டிக்கதை. மனநல காப்பகத்திற்கு உணவு வழங்கும் பணி செய்யும் ஒரு ஓட்டுனர் வழக்கம்போல் உணவை வழங்கிவிட்டு வீடு திரும்ப எத்தனித்தார்.

அப்பொழுதுதான் ஒரு டயரின் நான்கு போல்ட்களும் பழுதடைந்திருப்பதை கண்டார். அருகிலோ வாகனத்தை பழுது பார்க்கும் கடைகள் எதுவும் கிடையாது. என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு மனநிலை சரியில்லாதவர் என்ன விஷயம் என்று விசாரித்தார். பைத்தியத்திடம் சொல்லி என்ன பயன் என்று நினைத்தவர் சரி நம்முடைய ஆதங்கத்தையாவது கொட்டி தீர்ப்போம் என்று விஷயத்தை கூறினார். அனைத்தையும் கேட்ட அந்த மனநிலை சரியில்லாதவர் மிகவும் இயல்பாக, 'இவ்ளோதானா, மீதமுள்ள மூன்று டயர்களிலும் இருந்து ஒரு போல்ட்டை எடுத்து இந்த டயரில் மாட்டுங்கள். வண்டி பிரச்சனை இல்லாமல் ஓடும்' என்றார். கேட்ட ஓட்டுனர் திகைப்பில் என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தார்.

இது போன்ற நிறைய சம்பவங்களை நமது வாழ்வில் நாம் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆலோசணை கேட்டு என்ன நடந்து விடப்போகிறது என்று நம்மில் பலர் எவரிடமும் ஆலோசணை கேட்பதே இல்லை. இன்னும் சிலர் என்னை விட இவருக்கு என்ன பெரிதாக தெரிந்து விடப்போகிறது, இவர் இப்படித்தான் கூறுவார் என்று தாங்களாகவே ஒரு கருத்தை வளர்த்துக் கொண்டு எவரையும் அணுகுவதில்லை.

இன்னும் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு விஷயம் குறித்த ஒரு கருத்தை ஒரு நபரிடம் கூட கேட்க மாட்டார்கள். ஆனால் அந்த வேலையை முடிப்பதற்கு பல மணிநேரம் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருப்பார்கள். வேறு சிலர் அவர்களின் கருத்தை கூறிவிட்டு மற்றவர்களின் கருத்துக்கு காத்திராமல் அவ்விடத்தை விட்டு செல்வதில் கவனமாக இருப்பார்கள். இதனால் வாழ்வில் நாம் இழந்தவை எத்தனை? சிறிது யோசித்து பார்ப்போம்.

இழந்தது பணம் என்றால் அதனை சம்பாதித்து விடலாம். ஆனால் இழந்தது நேரமும் வாழ்க்கையும் என்றால் என்ன செய்வது?

முறையான ஆலோசணை இல்லாமல் கல்வியில் வழி தவறியவர்கள் முதற்கொண்டு வாழ்க்கையில் வழி தவறிய பலரையும் நாம் கண்டு வருகிறோம்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு சம்பவம். எதிரிகளை எதிர்கொள்வதற்கு தங்களின் படைகளை அழைத்து பத்ர் நோக்கி வந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்..). இஸ்லாமியர்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் பெரும் போர் அது. படைகளை ஒரு இடத்தில் முகாமிட கட்டளையிட்டார்கள் நபி(ஸல்..). உடனே ஹூபாப் அல் முன்திர்(ரலி..) என்ற ஒரு தோழர், 'நாயகமே! இது அல்லாஹ்வின் கட்டளையா அல்லது தங்களின் கருத்தா?' என்று கேள்வி எழுப்பினார். 'எனது கருத்துதான்' என்றார்கள் நபி(ஸல்..). 'அப்படியென்றால் நாம் முகாமிட இது ஏற்ற இடமில்லை. சிறிது முன்சென்று அங்குள்ள கிணறுகளையும் நமது வசமாக்கி முகாம்களையும் அமைப்போம்' என்றார். 'இதன் மூலம் எதிரிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை தடுக்கலாம்' என்று காரணத்தையும் கூறினார்.

அல்லாஹ்வின் தூதரான எனது கருத்திற்கு மாற்றுக் கருத்தா என்று கூறவில்லை நபி(ஸல்..). தோழரின் கருத்தை ஏற்றார்கள் நபி(ஸல்..). அதன் பின் நடந்ததை உலகறியும். வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த போரின் முக்கிய பங்காற்றிய தோழரின் பெயரை வரலாறு படித்த பலரும் கூட அறிவதில்லை. ஆனால் அவரின் கருத்தை உதாசீனம் செய்யாமல் செவி சாய்த்தார்கள் நபி(ஸல்..).

இதனை கேட்ட மாத்திரத்தில் நாடுகள், இயக்கங்களின் தலைவர்கள், குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என அனைவரும் எவ்வாறெல்லாம் அடுத்தவர்களின் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதில்லை என்று நமது எண்ணத்தை ஓட விடாமல் நமது நிலையை உரசி பார்ப்போம். எவரையும் குறைத்து மதீப்பீடு செய்யக்கூடாது, எவரையும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதுதான் மேற்கூறிய சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் பாடங்கள்.

மிகப்பெரும் நிறுவனங்களின் சாதாரண தொழிலாளிகள்தான் பிரமிக்கத்தக்க கருத்துக்களையும் ஆலோசணைகளையும் கூறினார்கள் என்று படித்து பரவசம் அடையும் நாம், நமது வாழ்வில் இதனை ஏற்றுக்கொள்ள ஏனோ இன்னும் தயக்கம் காட்டுகிறோம்.
சிந்தனைக்கு...
ஏர்வை ரியாஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

3 கருத்துகள்: on "செவி சாய்ப்போம்"

HARIS சொன்னது…

UNMAITHAN.....

Sathak Musthafa சொன்னது…

well Said

கருத்துரையிடுக