6 பிப்., 2011

இந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

ஜெனீவா,பிப்.6:இந்தியர்களின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன; உடல் உழைப்பு குறைந்துவிட்டது. உடல் பயிற்சி என்பது அறவே கிடையாது.

மணிக்கணக்காக தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து தொடர்கள் பார்ப்பதும் நொறுக்குத் தீனி தின்பதும் காபி, டீ அடிக்கடி குடிப்பதும் அதிகரித்துவிட்டது.

ஆண்கள் புகையிலை, மதுபான வகைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இரவில் நேரத்தோடு தூங்காமல் நடுநிசிவரை கண் விழிப்பதும் அதிகரித்து வருகிறது. இந்தக் காரணங்களால் இந்தியர்களுக்கு இதய நோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, கால் மூட்டுகள் வலுவிழப்பது அதிகம் வரத் தொடங்கியிருக்கிறது என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கிறது.

இந்தியாவில் இப்போது நடுத்தர வர்க்கத்தாரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களுடைய வாழ்க்கை முறை அடியோடு மாறிவருகிறது. உடல் உழைப்பையும், உடலை வருத்தி செய்யும் செயல்களையும் ஏதோ ஒரு காரணத்துக்காக கைவிட்டு வருகிறார்கள்.

சத்துள்ள புன்செய் தானியங்கள், நவதானியங்கள், காய்கறி, பழங்களைச் சாப்பிடும் பழக்கம் குறைந்து வழக்கம் அல்லாத பச்சரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவற்றை அதிகம் உட்கொள்கின்றனர்.

காபி, டீ ஆகிய சூடான பானங்களுடன் மதுவகைகளை ருசி பார்க்கும் வழக்கம் ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. இது படிப்படியாக கல்லீரல், குடல் ஆகியவற்றுடன் முழு உடலையும் கெடுத்துவிடும் என்பதை அறிந்தே இப்பழக்கத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.

எண்ணெயில் பொரித்தது, அவசரகதியில் மசாலா பொருள்களுடன் தயாரித்தது, காரம், மணம், சுவைக்காக ரசாயனங்கள் சேர்த்தது ஆகியவற்றை விரும்பி உண்ணும் போக்கு அதிகரித்து வருகிறது.

குளிர்பானங்களிலும் உள் உறுப்புகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய அதிக அமிலத்தன்மையும் காரத்தன்மையும் உள்ள,சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப்படும் பானங்களைக் குடிப்பது, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்ற பல்லுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் சுவைப் பண்டங்களைத் தின்பது ஆகியவையும் அதிகரித்துவிட்டன.

எல்லாவற்றையும் விட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் பணிபுரியும் இளைஞர்களும் உடல் பயிற்சியை அறவே விட்டுவிட்டனர்.

காலை, மாலை நேரங்களில் திடல்களில் விளையாடுவது என்பதும் அபூர்வக் காட்சியாகிவிட்டது. இலவச பஸ் பாஸ்களாலும், டூ வீலர் எனப்படும் பெட்ரோல் வாகனங்களாலும் நடப்பது என்பதே மறந்ததுபோல ஆகிவிட்டது.

இப்படி எல்லா வழிகளிலும் உடலுக்கு உரம் சேர்க்கும் செயல்களை நிறுத்திவிட்டு, உடலைச் சல்லடையாகத் துளைக்கும் மதுபானங்களையும் தின்பண்டங்களையும் சுவைப்பது அதிகமாகிவிட்டதால் எதிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உடனே போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மக்களை உடல் பயிற்சியில் தீவிரமாகத் திருப்பிவிட்டால்தான் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் எண்ணிக்கை இந்தியாவில் குறையும் என்கிறது.

மாரடைப்பு, மூளையில் ரத்தம் உறைதல் (பக்கவாதம்), ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதல், ரத்தக்கொதிப்பு அதிகமாதல், கழுத்துப் பகுதியில் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், எலும்புகள் தேய்ந்து வலுவிழத்தல், மனநலம் குன்றி எப்போதும் சோகத்திலும் விரக்தியிலும் ஆழ்ந்திருத்தல் ஆகியவை அதிகரித்து வருவதாக அதன் களஆய்வு தெரிவிக்கிறது.

கேரளம் தடுப்பு நடவடிக்கை:
பெண்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்புகள் எவை என்று தெரிந்து தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்திருக்கிறது. மக்களுக்கு அது விழிப்புணர்வை ஊட்டி வருகிறது.

ஆண்டுக்கு 32 லட்சம் மக்கள் உலகமெங்கும் இறக்கின்றனர். அவர்களில் 26 லட்சம் பேர் ஏழை, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வந்த நோய்களை ஆராய்ந்ததில் உடல் பயிற்சி இல்லாததுதான் இறப்புக்குக் காரணம் என்று தெரிகிறது.

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், நீண்ட தொலைவு காலாற நடத்தல், வீட்டு வேலைகளைத் தாங்களே செய்தல், கிணற்றில் நீர் இறைத்தல், துணிகளைத் துவைத்தல், வீடு பெருக்கி மெழுகுதல், காலை மாலை குடும்பத்தவர்களுடன் பூப்பந்து, சிறகுப்பந்து, வளைபந்து போன்றவற்றையாவது ஒரு மணி நேரம் விளையாடுதல் மூலம் உடலையும் உள்ளத்தையும் நலமாக வைத்துக் கொள்ளலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

இதற்கு முதல் படியாக எல்லோர் வீடுகளிலும் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை நாளின் பெரும்பாலான நேரங்களில் மூடி வைப்பதே நல்லது. அது கண்பார்வை கெடுவதை நிச்சயம் தடுக்கும். மனம் அமைதி அடையும்.

தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியர்கள் நோயில் விழும் வாய்ப்புகள் அதிகரிப்பு: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை"

கருத்துரையிடுக