6 பிப்., 2011

ஹுஸ்னி முபாரக்கிடமிருந்து அதிகாரத்தை ஏற்க உமர் சுலைமான் முயற்சி

கெய்ரோ,பிப்.6:எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிடமிருந்து அதிகாரத்தை பெறுவதற்கான முயற்சியாக துணை அதிபர் உமர் சுலைமான் ராணுவத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் கூறுகின்றன.

முபாரக் பதவி விலகவேண்டுமெனக் கோரி லட்சக்கணக்கான மக்கள் எகிப்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். ஆனால், 1981 ஆம் ஆண்டுமுதல் அதிபர் பதவியில் நீடித்துவரும் ஹுஸ்னி முபாரக் பதவி நாற்காலியிலிருந்து விலக மனமில்லை.

அதிகார மாற்றத்தை உடனடியாக ஆரம்பிக்கவேண்டுமென அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கோரிக்கை விடுத்தைத் தொடர்ந்து உமர் சுலைமான ராணுவ தலைவர்களுடன் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

முபாரக்கின் அதிகார வரம்பை குறைக்கவும், கெய்ரோவில் அதிபர் மாளிகையிலிருந்து ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றவும் முயற்சி செய்துவருகிறார் சுலைமான். பெயரளவில் முபாரக் அதிபராக தொடர்வார். எகிப்திய, அமெரிக்க வட்டாரங்களை சுட்டிக்காட்டி நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் ஆகிய பத்திரிகைகள் இத்தகவல்களை வெளியிட்டுள்ளன.

ஜனநாயக நடவடிக்கைகளை துவங்குவதுதான் இத்திட்டத்தின் முதல்படி. ஒன்று, அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறி ஷரமு ஷேக்கில் தனது வீட்டிற்கு செல்லவேண்டும். அல்லது, வருடாந்திர மருத்துவ பரிசோதனை என்றபெயரில் ஜெர்மனிக்கு செல்லவேண்டும் - இவை முபாரக்கின் முன்னால் வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளாகும். இது, முபாரக்கிற்கு மானம் போகாமல் பதவியை விட்டு விலகவும், எதிர்கட்சியினரின் போராட்டத்தை தணிக்கவுமான நடவடிக்கைகளாக கருதப்படுகிறது.

நீண்டகால எகிப்தின் இண்டலிஜன்ஸ் பிரிவு தலைவராக பணியாற்றிய உமர் சுலைமான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நெருங்கிய நண்பராவார். சுலைமானை அதிபராக்குவது அமெரிக்காவின் அஜண்டாவில் உள்ளதாகும். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் முபாரக்கை எதிராக முழக்கமிடுவதுப் போலவே உமர் சுலைமானுக்கெதிராகவும் முழக்கமிடுகின்றனர்.

அதேவேளையில், போராட்டத்தின் மையமாக விளங்கும் தஹ்ரீர் சதுக்கத்தில் 12-வது நாளாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 10 ஆயிரம் பேராவது இங்கு கூடியுள்ளனர். மேலும் அதிகமானபேர் அங்குவர தயாராகியுள்ள சூழலில் அதனை தடுக்க ராணுவம் முயன்றுவருகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹுஸ்னி முபாரக்கிடமிருந்து அதிகாரத்தை ஏற்க உமர் சுலைமான் முயற்சி"

கருத்துரையிடுக