5 பிப்., 2011

அல்ஜீரியாவில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பேரணிக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை

அல்ஜீர்ஸ்,பிப்:அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் பிப்ரவரி 12-ஆம் தேதி நடத்தவிருக்கும் பிரம்மாண்ட பேரணிக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேரணி நடத்துவது அதிகாரப்பூர்வமாக தடைச் செய்யப்பட்டுள்ளதாகவும், போராட்டம் வன்முறையாக மாறினால் அதன் முழு பொறுப்பும் அப்பேரணியை நடத்தும் அமைப்புகளையே சாரும் என அல்ஜீரியா சர்வாதிகார அரசின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவர்கள், மாணவர்கள், வேலையில்லாதவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்து இப்பிரம்மாண்ட பேரணியை நடத்தவிருக்கின்றார்கள்.

1992-ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ள அவசரச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும், புதிய அரசியல் கட்சிகளின் தடையை விலக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்பேரணி நடத்தப்படவிருக்கிறது.

ஆனால், அவசரச் சட்டத்தை வாபஸ்பெறும் எண்ணம் அரசு திட்டத்தில் இல்லை என துணை பிரதமர் யாஸித் கூறியுள்ளார்.

அண்டை நாடுகளான எகிப்து, துனீசியா ஆகியவற்றில் நடந்து வரும் மக்கள் திரள் போராட்டத்தை அடியொற்றி அல்ஜீரியாவில் மக்கள் சர்வாதிகார அரசுக்கெதிராக வீதிகளில் இறங்கி போராட தயாராக உள்ளனர்.
செய்தி:மாத்யமம்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அல்ஜீரியாவில் நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பேரணிக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை"

கருத்துரையிடுக