6 பிப்., 2011

எகிப்திய அரசியலில் திருப்பம்: பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஒப்புதல்

கெய்ரோ,பிப்:எகிப்து நாட்டின் செல்வாக்கு மிகுந்த இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், அந்நாட்டு சர்வாதிகார அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இந்நடவடிக்கை எகிப்திய அரசுக்கும், தடைச் செய்யப்பட்ட இயக்கமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்குமிடையேயான உறவில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எகிப்தில் நெடுங்காலமாக தடைச் செய்யப்பட்ட இயக்கமாகும். ஆனால், வலுவான கட்டமைப்பைக் கொண்டது. தற்பொழுது நடந்துவரும் மக்கள் திரள் போராட்டம் ஏற்படுத்திய நெருக்கடியினால் முபாரக்கின் அரசு தனது கசப்பான எதிரியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது.

இந்நடவடிக்கை அவ்வமைப்பிற்கு அதிகரித்துவரும் செல்வாக்கை காட்டுகிறது. "நாங்கள் இன்று பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளப் போகிறோம்" என AFP செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான எஸ்ஸாம் எல் எரியான் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் மக்கள் திரள் போராட்டத்தைத் தொடர்ந்து சர்வாதிகாரி முபாரக்கினால் நியமிக்கப்பட்ட துணை அதிபர் உமர் சுலைமான் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் உள்பட எதிர்கட்சியினரை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

முபாரக்கை மாற்றிவிட்டு புதிதாக தேர்தலை நடத்துவதற்குரிய ஜனநாயகரீதியிலான சீர்திருத்தங்களைக் குறித்து விவாதிக்க இந்த சந்திப்புக்கு உமர் சுலைமான் ஏற்பாடுச் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

"நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்கிறோம். ஆனால், அது இளைஞர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடியதாகும்.

கடந்த ஜனவரி 28-ஆம் தேதி முதல் தஹ்ரீர் சதுக்கத்தில் முபாரக்கின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்திவரும் இளைஞர்களின் பிரதிநிதியையும் பங்கேற்கச் செய்யவேண்டும். இளைஞர்களை சந்திக்க மறுத்தால் நாங்கள் எங்கள் முடிவை மறுபரிசீலனைச் செய்ய நேரிடும்." இவ்வாறு எரியான் கூறியுள்ளார்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் இன்னொரு தலைவர் தெரிவிக்கையில், "நாங்கள் பேச்சுவார்த்தையை துவக்குவது என முடிவுச் செய்துள்ளோம். மக்களின் கோரிக்கையில் எதனை அவர்கள் ஏற்க தயாராகயிருக்கிறார்கள் என்பதை கண்காணிப்போம். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க சம்மதித்தன் நோக்கம், உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகளின் தலையீட்டை தவிர்ப்பதற்காகும்." என்றார் அவர்.

முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முஹம்மது முர்ஸி கூறுகையில், எங்களது அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின், முபாரக் ராஜினாமாச் செய்யவேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளது என்றார்.

அல்ஜஸீராவின் கெய்ரோ செய்தியாளர் கூறுகையில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பங்கேற்கும் இப்பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார். அவர்கள் முபாரக்கின் ராஜினாமாவைக் கோருவார்கள்.

பாராளுமன்றத்தை முடக்குதல், கடந்த சில நாட்களாக மக்கள் திரள் போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்துதல், மேலும் அமைதியாக நடைபெறும் போராட்டத்தை அனுமதித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அல்ஜஸீராவின் அலெக்சாண்ட்ரியா (இது முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் வலுவாக காலூன்றியுள்ள பகுதியாகும்) செய்தியாளர் தெரிவிக்கையில், பெரும்பாலான மக்கள், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதுக் குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர் என்கிறார்.

செய்தி:AFP, ALJAZEERA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்திய அரசியலில் திருப்பம்: பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஒப்புதல்"

கருத்துரையிடுக