16 பிப்., 2011

சுரீந்தர் கோலிக்கு தூக்குத் தண்டனை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி,பிப்.16:நொய்டாவின் புறநகர் கிராமமான நித்தாரியில் சிறுமிகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்த சுரீந்தர் கோலிக்கு உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.

2006-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் பள்ளி சிறுமிகள் காணாமல் போவது அதிகரித்தது. இந்நிலையில் அங்குள்ள பங்களா வீடு அருகே கழிவுநீர் வாய்க்காலில் ஒரு சிறுமியின் கை வெளியே தெரிந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் மணீந்தர் சிங் பாந்தர். இவரும், இவரது உதவியாளர் சுரீந்தர் கோலியும் சேர்ந்து பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி பின்னர் கொலை செய்தது தெரிய வந்தது.

39 வயதான சுரீந்தர் கோலி மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த வழக்கை விசாரித்த உள்ளூர் விசாரணை நீதிமன்றம் கோலிக்கு தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. வீட்டின் உரிமையாளரான மணீந்தர் சிங் பாந்தருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்து விடுவித்தது.

ஆனால் மற்றொரு வழக்கில் தொடர்புள்ளதால் 54 வயதான மணீந்தர் சிங் இப்போது சிறையில் உள்ளார்.

மிகவும் அபூர்வமான இந்த வழக்கில் சுரீந்தர் கோலிக்கு கருணை காட்டுவது கூடாது என்பது உயிரிழந்தவர்களைப் பார்க்கும் போது நிச்சயம் தெரியும் என்று நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான சுதா மிஸ்ரா ஆகியோரடங்கிய பெஞ்ச் கருத்து தெரிவித்துள்ளது.

குற்றவாளியான சுரீந்தர் கோலி, தான் எவ்விதம் சிறுமிகளைக் கொன்றுள்ளார் என்பதை ஒப்புதல் வாக்குமூலமாக அளித்துள்ளார். அதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அவர் தாமாக முன்வந்து நீதிபதியின் முன்பாக இந்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். எனவே அதில் கட்டாயப்படுத்தி வாங்கியதற்கான முகாந்திரம் தெரியவில்லை.

நடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது சுரீந்தர் கோலிக்கு அளிக்கப்பட்டு மரண தண்டனை சரியானதுதான் என்றே நீதிமன்றம் கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். காஸியாபாத் நீதிமன்றமும், அலாகாபாத் உயர்நீதிமன்றமும் அளித்த தீர்ப்பு சரியானதுதான் என்றே நீதிமன்றம் கருதுவதாக அவர்கள் தெரிவித்தனர். மொத்தம் 16 வழக்குகள் சுரீந்தர் கோலி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறுமியை மானபங்கப்படுத்தி கொலை செய்த வழக்கின் மீது இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் அளித்துள்ளனர். ரிப்மா ஹல்தார் கொலை வழக்கில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மணீந்தர் சிங் பாந்தரை விடுவித்ததை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மற்ற வழக்குகளில் அவர் மீதான தீர்ப்பு அளிக்கப்படும்போது இதை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுரீந்தர் கோலி, மணீந்தர் சிங் பாந்தருக்கு 2009-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி காஸியாபாத் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதில் கோலி-யின் தூக்கு தண்டனையை அலாகாபாத் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 11, 2009-ல் உறுதி செய்தது. அப்போது மணீந்தர் சிங் பாந்தரை விடுவித்தது.

மணீந்தர் சிங் பாந்தரை விடுவித்ததை எதிர்த்து ரிப்மா-வின் தந்தை அனில் ஹல்தார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார். முதலில் இந்த வழக்கை நொய்டா போலீஸ் விசாரித்தது. பின்னர் இது சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த தொடர் கொலைகள் தொடர்பாக மொத்தம் 19 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தினமணி

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுரீந்தர் கோலிக்கு தூக்குத் தண்டனை: உச்சநீதிமன்றம்"

கருத்துரையிடுக