19 பிப்., 2011

உதயமான விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது - தஹ்ரீர் சதுக்கத்தில் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

கெய்ரோ,பிப்.19:சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும் உலகின் பிரபல முஸ்லிம் அறிஞருமான டாக்டர் யூசுஃப் அல்கர்தாவி நேற்று கெய்ரோ தஹ்ரீர் சதுக்கத்தில் 30 லட்சம்பேர் பங்கேற்ற ஜும்ஆ தொழுகையில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். டாக்டர் கர்தாவி எகிப்து நாட்டைச் சார்ந்த மார்க்க அறிஞராவார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், இஸ்லாத்தின் எதிரிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.
கடந்த 1981 ஆம் ஆண்டு எகிப்தை விட்டு வெளியேறிய அவர் கத்தர் நாட்டில் வசித்துவருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி எகிப்தில் மக்கள் எழுச்சிப் போராட்டம் உருவானது. இப்போராட்டம் துவங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து ஜும்ஆ உரைகளில் ஹுஸ்னி முபாரக்கின் கொடுங்கோல் ஆட்சிக்கெதிராக குரல் எழுப்பி வந்தார் கர்தாவி. மேலும் எகிப்திய மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடத்தினார்.

எகிப்தில் ஹுஸ்னி முபாரக் ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து அந்நாட்டு மக்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) வெற்றித்தினமாக கொண்டாடினர். இதனையொட்டி தஹ்ரீர் சதுக்கத்தில் நடந்த ஜும்ஆ தொழுகையில் பங்கேற்க 30 ஆண்டுகளுக்கு பிறகு கர்தாவி எகிப்து மண்ணில் காலடி எடுத்துவைத்தார். ஜும்ஆ தொழுகையில் 30 லட்சம் பேர் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கர்தாவி கடைசியாக 1981.ஆம் ஆண்டு கெய்ரோ அதிபர் மாளிகைக்கு வெளியே ஆபிதீன் மைதானத்தில் நடந்த தியாகப் பெருநாளில் ஜும்ஆ உரையை நிகழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்தாவி நேற்று ஜும்ஆ குத்பாவில் கூறியதாவது: "அரபுலக ஆட்சியாளர்கள் தங்களது குடிமக்களின் கோரிக்கைகளை கேட்க தயாராகவேண்டும். மக்களுக்கு எதிராக செயல்படுவதல்ல. மாறாக அவர்களுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையை நடத்த தயாராக வேண்டும். வெற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவையில்லை.

உதயமாகும் விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது, உலகம் மாறிவருகிறது. உலகம் முன்னேறுகிறது. அரபுலகிலும் மாற்றம் உருவாகிவிட்டது. (The world has changed, the world has progressed, and the Arab world has changed within) பதவி விலகிய ஹுஸ்னி முபாரக்கின் ஆதரவாளர்கள்தாம் தற்போது அதிகாரத்தில் தொடர்கின்றனர். ராணுவ ஆட்சி அல்ல. மக்கள் ஆட்சிதான் எகிப்தில் வரவேண்டும். அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும். காஸ்ஸாவிற்கான ரஃபா எல்லை திறக்கப்பட வேண்டும். எகிப்தின் உண்மையான புரட்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்ல. கிறிஸ்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

வரலாற்றில் நடந்தேறிய ருமேனிய, சிலுவை போர்களில் கிறிஸ்தவர்கள் நடத்திய தாக்குதலில் முஸ்லிம்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். ஆனால், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பரஸ்பரம் ஒத்துழைத்துள்ளனர். இந்த வெற்றிக்காக எல்லா மத நம்பிக்கையாளர்களும் இறைவனுக்கு சாஷ்டாங்கம் செய்து நன்றித் தெரிவிக்கவேண்டும்.

சாஷ்டாங்கம் (ஸுஜூது) எல்லா மதத்திலும் அங்கீகரிக்கப்பட்ட வழிபாடுதான். உலக முழுமைக்கும் எகிப்திய புரட்சி பாடமாகவும், உத்வேகமளிப்பதாகவும் அமைந்துள்ளது.

அநீதிக்கும், மோசடிக்கும், ஏகாதிபத்தியத்திற்குமெதிரான வெற்றி இது. ஒரே லட்சியத்திற்காக எகிப்திய மக்கள் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டது முன்மாதிரியாகும். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் ஐக்கியத்தின் காட்சி தஹ்ரீர் சதுக்கத்தில் அரங்கேறியது. இந்த ஐக்கியமும், ஒத்துழைப்பும் தொடர்ந்து நிலைபெறவேண்டும்.

முதலில் மக்கள் எழுச்சியை மோசமாக விமர்சித்துவிட்டு பின்னர் வேறுவழியில்லாமல் போராட்டத்தில் கலந்துகொண்ட கபட எண்ணங் கொண்டோரைக் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

14 நூற்றாண்டுகளாக இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் தத்துவத்தின் மையமாக விளங்கிய எகிப்து தனது பாரம்பரியத்தை மீட்டெடுக்கும். 'ஜனவரி 25' புரட்சிக்கு உயிர்தியாகிகளை அர்ப்பணித்த தஹ்ரீர் சதுக்கத்திற்கு 'உயிர் தியாகிகளின் சதுக்கம்' எனப் பெயரிட வேண்டும் என விரும்புகிறேன்.

காஸ்ஸாவிற்கான ரஃபா எல்லையை ராணுவம் திறந்துவிட வேண்டும். எகிப்து ஏகாதிபத்திய ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்றதுபோல் ஃபலஸ்தீனின் குத்ஸ் விடுதலையடைந்து அல் அக்ஸா மஸ்ஜிதில் இன்ஷா அல்லாஹ் தொழுகை நடத்தவும், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் எனக்கு ஆர்வமாக உள்ளது.

புரட்சி முழுமையாக வெற்றிப்பெறும் வரை அனைவரும் பொறுமையோடு உறுதியாக நிற்கவேண்டும்." இவ்வாறு கர்தாவி உரை நிகழ்த்தினார்.

கர்தாவி முன்னதாக இளைஞர்களை வாழ்த்தியவாறு தனது உரையை துவக்கினார். அவரது உரையை தஹ்ரீர் சதுக்கத்தில் ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்ட 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரத்துடனும், தேசிய கொடியை வீசியும் ஆதரித்தனர்.

கர்தாவியின் உரையை எகிப்திய மக்கள் மிக்க கவனத்தோடு கேட்டனர். எகிப்திய தேசிய தொலைக்காட்சி சேனல் உள்பட ஏராளமான அரபு தொலைக்காட்சிகள் கர்தாவியின் ஜும்ஆ உரை மற்றும் தொழுகையை நேரடியாக ஒளிபரப்பின.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "உதயமான விடியலை எவராலும் பின்னோக்கி இழுக்கவியலாது - தஹ்ரீர் சதுக்கத்தில் டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி"

பெயரில்லா சொன்னது…

இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

கருத்துரையிடுக