19 பிப்., 2011

அலர்ஜி(ஒவ்வாமை) தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்

பிப்.19:தட்பவெப்பம், உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது.

பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது.

அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பாதுகாப்பு முறைகள்:

* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.

* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.

* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.

* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.

* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.

* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.

* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.

* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.

* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.

* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.

* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அலர்ஜி(ஒவ்வாமை) தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்"

கருத்துரையிடுக