2 பிப்., 2011

எகிப்திலிருந்து நாடு திரும்பும் இந்தியர்களிடம் பணம் பறிக்கும் ஏர் இந்தியா

மும்பை,பிப்.2:பற்றி எரியும் எகிப்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வரும் பயணிகளிடம் பெருமளவிலான பணத்தை டிக்கெட் கட்டணமாக ஏர் இந்தியா பறிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டு குடிமக்களை பத்திரமாக அங்கிருந்து மீட்டு வருகின்றன.

பெரும்பாலான நாடுகள் இலவசமாகவே அவர்களை விமானங்கள் மூலம் அழைத்து வருகின்றன. ஆனால் இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனமோ, வந்த வரைக்கும் லாபம் என்பது போல பெரும் பணத்தை தருமாறு கூறி இந்திய பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எகிப்திலிருந்து இந்தியா வரும் ஏர் இந்தியா சிறப்பு விமானங்களில் பயணிக்க வேண்டுமானால் ரூ.45,000 முதல் ரூ.55,000 வரை பறிக்கிறார்களாம். இதைக் கொடுக்காவிட்டால் விமானம் ஏற முடியாது என்றும் கட் அன்ட் ரைட்டாக சொல்கிறார்களாம். அங்கிருந்து மும்பைக்கு வந்து சேர்ந்த பயணிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு இது.

ஆனால் இதை நியாயப்படுத்தியுள்ளது ஏர் இந்தியா. இது மீட்புப் பணி அல்ல என்று மத்திய அரசு எங்களுக்குத் தெரிவித்துள்ளது. மீட்புப் பணியாக இருந்தால் கட்டணம் குறைவாக இருக்கும், ஏன் கட்டணமே இல்லாமல் கூட இருக்கும். ஆனால் மீட்புப் பணியாக இதை அரசு அறிவிக்காததால், இந்தக் கட்டணத்தை செலுத்தியாக வேண்டும் என்று தெனாவெட்டாக கூறியுள்ளது ஏர் இந்தியா.

ஏர் இந்தியா மட்டுமல்லாமல், எகிப்திலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்ல விரும்புவோர், எகிப்து ஏர், கத்தார் ஏர்வேஸ், ஓமன் ஏர் உள்ளிட்டவற்றுக்குச் சென்றால் அவர்களும் வழக்கத்தை விட அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்களாம்.

இந்தக் கட்டணத்தையும் கூட ரொக்கமாக கொடுத்தால்தான் டிக்கெட் போட்டு விமானத்தில் ஏற அனுமதிக்கிறார்களாம்.

இதற்கிடையே, இதுவரை 2 சிறப்பு விமானங்களை எகிப்துக்கு இயக்கிய ஏர் இந்தியா நிறுவனம் மேலும் ஒரு சிறப்பு விமானத்தை இயக்கவுள்ளதாம். அது சரி, காசைக் கறப்பதாக இருந்தால் எத்தனை சிறப்பு விமானத்தையும் கூட இயக்கலாமே.

தட்ஸ்தமிழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "எகிப்திலிருந்து நாடு திரும்பும் இந்தியர்களிடம் பணம் பறிக்கும் ஏர் இந்தியா"

கருத்துரையிடுக