7 மார்., 2011

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சி எதிரொலி: அதிகாரக் குவியலை குறைத்து பரவலாக்குகிறது சீனா

பெய்ஜிங்,மார்ச்.7:சீன அரசு தனது நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, அதிகாரக் குவியலை குறைத்து பரவலாக்கப்படும் என அறிவித்துள்ளது. தேசிய மக்கள் மன்றக் கூட்டத்தின் தொடக்க உரையில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ சனிக்கிழமை இதை தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சீன அதிபர் ஹூ ஜிந்தாவோ கலந்து கொண்டார். பிரதமர் பேசும்போது கூறியது: "சீனாவில் வருமானத்தில் உள்ள பெரும் ஏற்றத்தாழ்வு குறித்து மக்களிடையே பெரும் வருத்தம் உள்ளது. நிர்வாகத்தில் நிறைய மாறுதல்கள் கொண்டு வரவேண்டியுள்ளது. அதிகாரங்கள் மத்திய அரசில் குவிந்துள்ளன. இவை பரவலாக்கப்பட வேண்டும். வரம்பற்ற அதிகாரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். ஊழலைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளும், நீதி, நியாயங்களும் காக்கப்பட வேண்டும்." என அவர் கூறினார்.

தேசிய மக்கள் மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சுமார் 3,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் சீன சமூக மேம்பாட்டுக்காக சேவை புரிந்தவர்களின் குழுவும் கலந்து கொண்டது. ஆண்டுக்கு ஒரு முறை கூடும் மன்றம் இது.

மேற்காசிய நாடுகளில் மக்கள் புரட்சியின் மூலம் கவிழ்ந்து வரும் அரசுகளின் நிலைமை தங்களுக்கும் வந்துவிடக் கூடாது எனும் நோக்கோடு சீன அரசு இந்தவித அரசியல் உத்தியை மேற்கொள்கிறது எனக் கூறப்படுகிறது.

பிரதமர் வென் ஜியாபோ சீன அரசியல் தலைமையில் 4-வது இடத்தை வகிப்பவர். அடுத்த ஆண்டு இவர் ஓய்வு பெற இருக்கிறார். எனினும் சீன ஆட்சியில் முக்கியத்துவம் பெற்ற மன்றத்தின் கூட்டத்தில், அதிபர் முன்னிலையில் இவர் நிகழ்த்திய உரையை சீன அரசியல் நோக்காளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

ஆனால், கடந்த ஆண்டு தொழில் நகரமான ஷென்சென் எனுமிடத்தில் பேசும்போது, சீனாவில் மேலும் ஜனநாயக மாறுதல்கள் தேவை என கூறியிருந்தார். உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக விளங்கும் சீனா, மேலும் முன்னேற வேண்டுமானால் அரசியல் சீர்திருத்தங்கள் வேண்டும், மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என கூறியிருந்தார். இது முதலில் சில மூத்த தலைவர்களால் வரவேற்கப்பட்டாலும் பின்னர், இது கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது. சீனா இது போன்ற அரசியல் மாற்றங்களுக்குத் தயாராகவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாபூர்வமான நாளேடு கூறியது.

சனிக்கிழமை வென் ஜியாபோ நிகழ்த்திய உரையில், கடந்த 5 ஆண்டுகளில், சுமார் 6 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பது, மிக அதிகமான அளவில் உள்ள தனிநபர் வருமானங்களைக் கட்டுப்படுத்துவது, மிக அதிகபட்ச லாபம் ஈட்டும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது, உயர் அதிகாரிகளின் வருமானங்களைக் கட்டுக்குள் வைப்பது குறித்தும் தனது உரையில் பிரதமர் வென் ஜியாபோ பேசினார்.

சீனாவுக்கு வெளியே உள்ள கம்யூனிஸ்ட் அரசின் எதிர்ப்பாளர்கள் ஆட்சிக்கு எதிரே ஆதரவு திரட்ட முயன்று வருகின்ற நிலையில், பிரதமர் வென் ஜியாபோ அதிகாரக் குவியலைத் தளர்த்துவது பற்றியும், மக்கள் உரிமைகளைப் பற்றியும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

மேற்காசியாவில், துனீசியா தொடங்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் நெடுங்காலமாக நடந்து வந்த ஆட்சியாளர்களை எதிர்த்து நடந்த மக்கள் எழுச்சியைக் கண்டு அரசு எதிர்ப்பாளர்கள், இணையதளம் மூலமாக ஆதரவு திரட்ட முயன்று வருகின்றனர்.

கடந்த இரு வாரங்களாக நடந்து வரும் எதிர்ப்புக்கு 'மல்லிகைப் புரட்சி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆயினும், சீனக் கிளர்ச்சிக்கான முயற்சிகள் பெருத்த மக்கள் போராட்டங்களாகப் பரவவில்லை. இதற்கு காரணம், தலைநகர் பெய்ஜிங்கிலும் மற்ற நகரங்களிலும் பாதுகாப்புப் படை பலம் பிரயோகித்து இந்த எதிர்ப்பு முயற்சிகளை அடக்கியதுதான்.

இது போன்ற கிளர்ச்சி சம்பவங்களுக்கு முக்கியத்துவம் தரும் செய்தி நிறுவனங்களுக்கும், மற்ற ஊடகங்களுக்கும் சீன அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. செய்தியாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், வெளிநாட்டு நிருபர்களுக்கு சீனாவில் தங்க வழங்கப்பட்டுள்ள அனுமதியும் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட புரட்சி எதிரொலி: அதிகாரக் குவியலை குறைத்து பரவலாக்குகிறது சீனா"

கருத்துரையிடுக