7 மார்., 2011

ஹோஸ்னி முபாரக் உலகின் மிகப்பெரிய பணக்காரர் - 'தி கார்டியன்'

லண்டன்,மார்ச்.7:எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று 'தி கார்டியன்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு 7000 கோடி அமெரிக்க டாலர்கள் (ரூபாயில் சுமார் 3.22 லட்சம் கோடி) சொத்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

எகிப்து நாட்டின் அதிபராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் முபாரக். சமீபத்தில் அந்த நாட்டில் நடந்த மக்கள் புரட்சியால் அவர் அதிபர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

இந்த நிலையில் லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் பணக்காரராக ஹோஸ்னி முபாரக் இருக்கலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது. ஹோஸ்னி முபாரக் இந்தப் பணத்தை ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள வங்கிகளிலோ அல்லது சொசுகு பங்களாக்கள், ஹோட்டல்களிலோ முதலீடு செய்திருக்கலாம் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

மன்ஹாட்டன், பெவர்லிஹிஸ்ல் பகுதிகளில் அவருக்கு ஏராளமான சொத்துகள் இருப்பதாகத் தெரிகிறது என்றும், இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் அவர் தனது ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார் என்றும் அல் கபர் என்ற பத்திரிகை முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. சொத்துப் பட்டியலில் மெக்ஸிகோவைச் சேர்ந்த தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் (5,350 கோடி அமெரிக்க டாலர்கள்), மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் (5,300 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகியோர் ஹோஸ்னி முபாரக்குக்கு அடுத்த இடத்தில் உள்ளனர்.

இதுகுறித்து டர்ஹாம் பல்கலைக்கழக பேராசிரியர் கிறிஸ்டோபர் டேவிட்சன் கூறியதாவது: 'முபாரக் அதிபராக இருந்தபோது பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துகொண்டார். வெளிநாட்டு நிறுவனங்களுடன் அவர் செய்துகொண்ட ஒப்பந்தங்களால் அவர் ஏராளமான சொத்துகளைச் சேர்த்தார் என்றார் அவர்.

ஹோஸ்னி முபாரக்கின் தெரிந்த சொத்து விவரமே 7 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் என்னும்போது, தெரியாத வகையில் அவருக்கு இன்னும் கூடுதலாக சொத்துகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹோஸ்னி முபாரக் உலகின் மிகப்பெரிய பணக்காரர் - 'தி கார்டியன்'"

கருத்துரையிடுக