7 மார்., 2011

மலேகான்:ஏ.டி.எஸ் தேவையில்லாமல் அவசரம் காட்டியுள்ளது - சி.பி.ஐ

மும்பை,மார்ச்.7:2006-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை வேகமாக முடிப்பதற்காக தேவையில்லாமல் மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) அவசரம் காட்டியுள்ளது என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்தபொழுது சிறையிலிருந்த ஒருவரையும், 700 கி.மீ அப்பாலிருந்த இன்னொருவரையும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து வழக்கை விரைவில் முடிக்க ஏ.டி.எஸ் அவசரப்பட்டுள்ளதாக தற்பொழுது இவ்வழக்கை மறுவிசாரணைச் செய்துவரும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

ஏ.டி.எஸ்ஸின் குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ஷாஹித், 35 பேரின் மரணத்திற்கு காரணமான மலேகான் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது 700 கி.மீ தொலைவிலுள்ல கிராமத்தில் ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகித்துக் கொண்டிருந்தார். இதனை நிரூபிக்கும் வகையிலான நேரடி சாட்சிகள் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.

ஷாஹித், தடைச் செய்யப்பட்ட இயக்கமான சிமி இயக்கத்தின் உறுப்பினராவார். குண்டுவெடிப்பு நிகழும்பொழுது இவர் மலேகானில் இல்லை என சி.பி.ஐ அதிகாரி தெரிவித்தார். ஆனால், நேரடி சாட்சிகளை ஏ.டி.எஸ் புறக்கணித்துள்ளது. வழக்கை எளிதில் முடித்துவிடுமாறு சிலரின் விருப்பங்களை பாதுகாக்கும் விதமாக ஏ.டி.எஸ் நடந்துள்ளது என சி.பி.ஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

2006-ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பைக் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டுமெனவும், குற்றவாளிகள் இல்லை என கண்டறிவோரை விடுதலைச்செய்ய வேண்டுமெனவும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.

மலேகான் குண்டுவெடிப்புக் குறித்த ஏராளமான தகவல்கள் தனக்கு கிடைத்திருப்பதாக தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்துள்ளார். இவற்றை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம் என அவர் தெரிவித்தார்.

ஷபீர் மஸீஹுல்லாஹ் என்பவர்தாம் இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபர். பாகிஸ்தானில் பயிற்சிப் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவரின் வீட்டில் குண்டுவெடிப்பு நடத்துவதற்கு தேவையான ஆர்.டி.எக்ஸ் வெடிப்பொருளை இவருடைய குடோனில் பதுக்கி வைத்திருந்ததாக ஏ.டி.எஸ் கூறியிருந்தது. ஆனால், இவர் மலேகான் குண்டுவெடிப்பு நிகழும்பொழுது 2006 ஜூலை 11-ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு மலேகான் குண்டுவெடிப்பில் பங்கில்லை என சி.பி.ஐ தெரிவிக்கிறது.

மலேகான் குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை நடத்தியது ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என்ற உண்மையை சுவாமி அஸிமானந்தா அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக தெரியவந்தது.

இந்நிலையில் 2006-மலேகான் குண்டுவெடிப்பைக் குறித்து சி.பி.ஐ மறுவிசாரணை மேற்கொண்டுள்ளது. இதுத்தொடர்பாக ஏ.டி.எஸ் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடைத்த சிதிலங்கள் ஆகியவற்றையும் சி.பி.ஐ பரிசோதித்து வருகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மலேகான்:ஏ.டி.எஸ் தேவையில்லாமல் அவசரம் காட்டியுள்ளது - சி.பி.ஐ"

கருத்துரையிடுக