8 மார்., 2011

பெண்மைக்கு எதிரான சவால்கள் - மகளிர்தின சிறப்புக் கட்டுரை

கருவறையிலிருந்து துவங்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிலவும் இவ்வுலகில் மீண்டும் ஒரு மகளிர் தினம் நம்மை கடந்து செல்கிறது.

1978-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சியின் விளைவாக உருவானதுதான் மகளிர் தினம்.

குஜராத்தும், கஷ்மீரும் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு சாட்சிகளாக திகழ்கின்றன. அன்றாடம் பெண் சமூகம் அனுபவிக்கும் வேதனைகளும், கொடுமைகளும் ஏராளம். சமீபத்தில் கேரள மாநிலத்தில் ரெயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிட்சை பலனின்றி இறந்துபோன சவுமியாவும், மணிப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு உடல் தளர்ந்துபோன எரோம் ஷர்மிளாவும் நிகழ்காலத்தின் உதாரணங்களாவர்.

சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் படுத்து உறங்கவோ, பயணிக்கவோ, பணிபுரியவோ முடியாத பயங்கரமான சமூக சூழலில்தான் பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். பெண்களுக்கு எதிராக ஏதேனும் கொடுமைகள் நிகழும்பொழுது அதனைக் குறித்து விவாதம் தூள் கிளப்பும். ஆனால், அவை அடங்கி சில தினங்களுக்குள்ளாகவே வேறொரு சம்பவம் நிகழ்ந்திருக்கும். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக கருதப்படும் வீடுகளில் கூட உடல்-மனோரீதியான கொடுமைகளுக்கும், பாலியல் அராஜகங்களுக்கும் ஆளாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனசாட்சியையும் மனித நேயத்தையும் கொலைச் செய்துவிட்டு ஹிந்துத்துவ வெறியூட்டப்பட்ட பாபு பஜ்ரங்கி போன்ற கயவர்களுக்கு பெண்கள் வெறும் ஒரு மாமிசப் பிண்டங்களாக மாறிப்போயினர். பாலியல் வக்கிரமும், மதுபானமும் ஏற்படுத்திய போதையில் ரெயிலிருந்து தள்ளப்பட்ட சவுமியா, கோவிந்தசாமி என்ற பிச்சைக்காரனனின் முன்னால் சதைப் பிண்டமாக மாறினார்.

நிலோஃபரும், ஆசியா ஜானும் இன்னும் பல கஷ்மீரின் சகோதரிகள் இந்திய பாதுகாப்புப் படையினரின் தலைக்கேறிய பாலியல் வக்கிரங்களுக்கு ஆளான பொழுது பெண்மைக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானது.

பெண்களின் மானமும், சுதந்திரமும் குதறப்படும் சூழல்கள் எளிதாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டங்களை இயற்றுவது மட்டும் போதுமானதல்ல. சட்டங்களுக்கும், கமிஷன்களுக்கும் நாட்டில் பஞ்சமில்லை. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் எத்தனை பேர் இந்நாட்டில் தண்டிக்கப்பட்டார்கள்?

குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் கொடூரமான பாலியல் வக்கிரங்களுக்கு பலியான பெண்களுக்கு இதுவரை நீதிக் கிடைக்கவில்லை. கஷ்மீர் பெண்களின் துயரங்களுக்கு இதுவரை தீர்வு இல்லை. சட்டத்தின் ஓட்டைகளை பணத்தையும், அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பாலியல் வக்கிரப்புத்தியைக் கொண்ட கயவர்கள் தப்பிவிடுகின்றனர்.

குடும்பம் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பாடுபடும் பொறுப்புணர்வுக் கொண்டவனாக, துணிச்சலும், துடிப்பும் மிகைத்தவனாக ஆண் மதிக்கப்படும் வேளையில் பெண்கள், துயரத்தில் உழலும் அபலைகளாகவும், எதையும் தாங்கும் இதயம் படைத்த பொறுமைசாலிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள்.

ஆண்கள்-பெண்களுக்கிடையே நிலவும் உறவு என்பது எஜமான் - அடிமை உறவுப் போன்று மாறிவிட்டது.

கல்வி மற்றும் சமூகரீதியான துறைகளில் பெண்கள் இன்று மகத்தான முன்னேற்றத்தை பெற்றிருக்கலாம். ஆனால், அவர்களில் பலரும் தங்களது வீடுகளில் நிம்மதியை இழந்தே காணப்படுகின்றனர்.

பெண்ணை தெய்வமாக மாற்றி 'பாரத மாதா' என புகழ்ந்துக் கொண்டே பெண்மையை கொலைச் செய்யும் கொடூரமான மதச்சட்டங்களும், அதனை செயல்படுத்த முயலும் மதவெறியர்களும் நம் நாட்டில்தான் உள்ளனர்.

சுதந்திரம் என்றாலே அது ஆடைக் குறைப்பும், ஆண்களுடன் பெண்களும் கலந்துறவாடுவதும்தான் என வக்கிரமான இலக்கணம் வகுத்துள்ள மேற்கத்திய கேடுகெட்ட கலாச்சாரத்தின் பாதிப்பு நம் நாட்டையும் தாக்கியுள்ளது ஆச்சரியப்படும் விஷயம் அல்ல.

மனிதப் படைப்பு என்ற நிலையில் போதுமான அங்கீகாரமோ, முக்கியத்துவமோ கிடைக்காமல் கொடூரமான புறக்கணிப்புக்கு ஆளாகி வெதும்பியவாறு பெருமூச்சுடன் வாழ்ந்துவரும் எத்தனையோ பெண்கள் இந்நாட்டில் உள்ளனர்.

கணவனுக்கும், குழந்தைகளுக்கும் சேவைப்புரிந்துக் கொண்டு வீட்டிலேயே அடைந்துக் கிடப்பதா? என புரட்சி வசனம் பேசி பெண்மையை வெளியே இழுத்தவர்கள் ஆண்களை சுண்டி இழுக்க அவளை அழகு பதுமையாகவும், காட்சிப் பொருளாகவும் மாற்றினார்களே தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை. அவளுடைய பட்டமும், பதவியுமெல்லாம் திருமணச் சந்தைக்கான தகுதிகள் மட்டுமே.

அன்பையும், பாசத்தையும் பொழிந்து வளர்க்கும் பெற்றோரிடமிருந்து பிரிந்து திருமண வேளையில் கணவனின் வீட்டிற்கு செல்லும் பெண் பல கட்டுப்பாடுகளுக்கு ஆளாக்கப்படுகின்றாள். ’மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என எழுதியவர்கள் நல்லதொரு கணவன் அமைவதைக் குறித்து கூற மறந்தது ஏனோ?

பெண்களுக்கு உரிய கருத்து சுதந்திரமும், மரியாதையும் அளித்து அவர்களை அங்கீகரிப்பதன் மூலமே நல்லதொரு குடும்ப சூழலை கட்டியெழுப்ப இயலும். பல குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிப்பதற்கு காரணம் இதுவே. கல்வியை அளிக்க முன்வரும் பெற்றோர்கள் அப்பெண்ணிடம் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதித்து, பீதிவயப்படுத்துவதால் அநீதங்களை எதிர்க்கும் துணிச்சல் இல்லாத கோழைகளாக பெண்கள் மாறிவிடுகின்றார்கள். இதனால் தங்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்ப அவர்கள் தயங்கியே வருகின்றார்கள்.

சுதந்திரம் மற்றும் அமைதியான சூழலில் வளர்ந்து போதிய கல்வியும், நல்லொழுக்கத்தையும், மனோதிடத்தையும் பெற்ற பெண்மணியும் அவளுக்கு உறுதுணையாக நிற்கும் பெற்றோரும், கணவனும், உறவினர்களையும் கொண்ட மனிதநேயமிக்க மனிதர்களைக் கொண்ட சமூகம்தான் இன்றைய உலகிற்கு தேவை.

ஆடம்பரம் மற்றும் ஆபரண மோக உலகில் உழலும் பெண்களை அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையிலான விசாலமான லட்சியத்தை நோக்கி வழிநடத்தும் பொழுதுதான் பெண் சமூகம் முன்னேற்றமடைவதும், சக்திப் பெறுவதும் சாத்தியமாகும்.

கெளஸர் பானுவும், நிலோஃபரும், ஆசியா ஜானும், சவுமியாவும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதை பார்த்து அனுதாபம் கொண்டுவிட்டு சில நாட்களில் அந்நிகழ்வுகளை மறந்துவிடும் ஆண்களையல்ல, மாறாக அவர்களை தங்களது சொந்த சகோதரிகளாக நினைத்து பெண் சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடும் மனிதநேயமிக்க மனிதர்கள் தாம் இவ்வுலகிற்கு தேவைப்படுகின்றார்கள்.

மனித நேயம் என்பது நவ நாகரீக உலகில் மரணப்படுக்கையில் கிடக்கிறது. நல்லொழுக்கங்களும், நேர்மையும் தேய்ந்துக்கொண்டு வருகிறது. மீதமிருப்பவையோ சில சடங்குகளிலும், வழிபாடுகளுடனும் சுருங்கிவிட்டது.

தாய், மனைவி, சகோதரி போன்ற உறவுகளை மதிக்கவும், அவர்களை அங்கீகரிக்கவும் நாம் தயாரகவேண்டும். பிற பெண்களையும் நமது சகோதரிகளாக மதித்து உரிய மரியாதையும், வரம்புகளையும் பேணும் போதுதான் ஒழுக்கமிக்க சமூகம் உருவாகும். ஒழுக்கம் சீரழிந்து, வரம்புகள் மீறப்படும் பொழுதுதான் பல்வேறு அவலநிலைகளை பெண் சமூகம் சந்திக்கும் சூழல் உருவாகிறது.

இறைவனின் பூமியில் ஆண்களும், பெண்களும் சமமான அந்தஸ்தை உடையவர்களே! சர்வ அதிகாரமும் படைத்த இறைவனின் எவ்வித அதிகாரங்களுமில்லாத படைப்புகள்தாம் ஆண்களும், பெண்களும் என புரிந்து கொள்பவர்களால் பெண்கள் அவமானத்திற்கு அநீதத்திற்கும் ஆளாக்கப்படமாட்டார்கள்.

விபச்சாரம் செய்ய அனுமதிக் கேட்ட கிராமப்புறத்து அரபி ஒருவரிடம் நபி(ஸல்...) இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்‘ என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து, 'உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நான் விரும்பமாட்டேன்' என்று கூறினார். அப்போது நபியவர்கள் 'நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ, அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்' என்று கூறினார்கள்.

50 சதவீத இடஒதுக்கீட்டை உள்ளாட்சி அதிகாரங்களில் வழங்குவதன் மூலமாகவோ அல்லது 33 சதவீத இடஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் அளிப்பதன் மூலமாகவோ பெண்களின் பாதுகாப்பையோ முன்னேற்றத்தையோ உறுதிச் செய்யவியலாது.

குடும்பம் முதல் சமூக வரை பரவியுள்ள பெண்ணைக் குறித்த சிந்தனைகள் மாற்றப்பட வேண்டும். முறையான சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமும் வழங்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை புரிந்துக்கொண்டு அதனை சரியான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை பெண்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவேண்டும். பெண்கள் சுயமாக பலம்பெற்று அதற்கு தேவையான பின்புலமாக ஆண்கள் மாறி ஒரு கூட்டான முயற்சியின் வாயிலாகத்தான் பெண்களின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் உறுதிச்செய்ய இயலும்.
ASA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெண்மைக்கு எதிரான சவால்கள் - மகளிர்தின சிறப்புக் கட்டுரை"

கருத்துரையிடுக