11 மார்., 2011

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி தாக்கியதால் பெரும் சேதம்

டோக்கியோ,மார்ச்.11:ஜப்பானில் இன்று பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகள் ஜப்பானில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத‌னையடுத்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவை (250.கி.மீட்டர் தொலைவில்) ஒட்டிய பகுதிகளில் பலர் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஜப்பானின் வட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இன்று (ஜப்பான் நேரப்படி மதியம் 2.48 மணி அளவில்) 8.8 ரிக்டர் அளவாக பதிவாகியிருக்கிறது. இந்த நடுக்கம் காரணமாக நூற்றுக்கணக்கான வீடுகள் குலுங்கி தரைமட்டமாகின. சில இடங்களில் இடிந்த கட்டடங்கள் தீப்பற்றியும் எரிகிறது. எண்ணெய் கிணறுகள் தீப்பிடித்து எரிந்தன. மியாகி தீவு பகுதியில் ராட்சத அலை (13-அடி உயரத்தில்) காரணமாக தண்ணீர் வீடுகளில் புகுந்து மூழ்கின. இதனால் விமான நிலையங்கள் மூடப்பட்டன. அணுசக்தி மையங்களில் எந்த வித கசிவும் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். புகுசிமா அணு மின் நிலையத்தில் குளிருட்டும் சாதனம் பழுதடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினார். இதனையடுத்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து பசிபிக் கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயர்ந்த பட்ச எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


சுமார் 6 மீட்டர் (20 அடி உயரத்திற்கு) ராட்சத அலை இருக்கும் என்றும் இதன் காரணமாக ஜப்பானில் மியாகி தீவின் கடலோர பகுதிகள் கடும் பாதிப்பை சந்திக்கும் என்றும் முன்னதாக விடப்பட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இந்த ஒரு வார காலத்திற்குள் இது 2-வது பெரிய நிலநடுக்கம் ஆகும். இன்றைய நடுக்கம் - சுனாமியால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த முழு விவரங்கள் இன்னும் வரப்படவில்லை. 30 பேர் இறந்து விட்டனர் என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கிறது உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக போன், மின்சாரம் அனைத்தும் தடைபட்டு விட்டன. கடலோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான கார்கள் , வீடுகள் மிதந்து சென்ற வண்ணம் உள்ளது. 1923 டோக்கியோ அருகே காண்டோ பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் . கடந்த 13 ஆண்டு காலத்தில் இன்று நடந்த ‌பூகம்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜப்பான் பார்லி.,யில் இருந்து அனைவரும் வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர். அணு உலைகள் எவ்வித பாதிப்பும் ஏற்படவி்ல்‌லை.

அழிவை சந்திக்க அனைத்து மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும் என ஜப்பான் பிரதமர் நாட்டுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பூகம்பத்தை அடுத்து ரஷ்யா, சிலி, பிஜூ , இந்தோனேசியா , தைவான், மெக்சிகோ, பெரு, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ், அமெரிக்காவில் ஹூவாய் தீவு உள்பட 10 நாடுகளில் , கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுனாமி எச்சரிக்கை இதுவரை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜப்பான் நடுக்க எதிரொலி இந்தியாவிற்கு இருக்காது என புவியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி தாக்கியதால் பெரும் சேதம்"

கருத்துரையிடுக