4 நவ., 2009

வந்தே மாதரம், தீவிரவாதத்துக்கு எதிராக தியோபந்த் 'பத்வா'!

தியோபந்த் (உத்தரப் பிரதேசம்): வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் என்ற முக்கிய இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 10,000 மேற்பட்ட மதகுருமார்கள், மத அறிஞர்கள் கலந்து கொண்டனர்.சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் அமைப்பு 2006ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதைப் பாடக் கூடாது என்று முஸ்லீம்களுக்கு பத்வா (தடை) பிறப்பித்தது. அந்தத் தடை சரியானதே. நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மதத்துக்கு எதிரானது.மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இதனால் அதைப் பாட முடியாது. வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. தேச பக்திக்கு வந்தே மாதரம் பாடுவது என்பது தேவையற்றது. வகுப்பு மோதலைத் தூண்டவும், சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவும் வந்தே மாதரம் பாடல் பிரச்சனையை கட்சிகள் பயன்படுத்தக் கூடாது.
இஸ்லாத்தில் எந்தவிதமான வன்முறைக்கும் இடமி்ல்லை. மதத்தை காரணம் காட்டி தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது மிக மிக தவறான செயல். இதனால், எல்லா வகையான தீவிரவாத்துக்கும் எதிராக பதவா பிறப்பிக்கிறோம். தீவிரவாதம் மனித குலத்துக்கு எதிரான செயல். அதை ஆதரிக்கவோ அதற்கு உதவி புரியவோ கூடாது.மதரஸாக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸா வாரியம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மதரஸாக்களை நாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்வோம்.சச்சார் கமிஷன் அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தேவையற்ற ஒன்று என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வந்தே மாதரம், தீவிரவாதத்துக்கு எதிராக தியோபந்த் 'பத்வா'!"

கருத்துரையிடுக