23 நவ., 2009

பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய் - அத்வானி -ஜோஷிக்கு தொடர்பு: லிபரான் கமிஷன்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் கூறியுள்ளது.

நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் நிலையில் இந்தக் கமிஷனின் அறிக்கையின் சில பகுதிகள் 'லீக்' ஆகியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு திடீரென உணர்ச்சி வேகத்தில் நடந்துவிடவில்லை. அது மிகவும் திட்டமிட்ட சதி.

இந்தச் சதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நிச்சயமான தொடர்பு உண்டு. இவர்களுக்குத் தெரியாமல் இந்த சம்பவம் நடந்ததாகவோ அல்லது இவர்கள் குற்றமற்றவர்கள் என்றோ கூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லிபரான் சமர்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில், எந்த நாளில் தாக்கலாகும் என்பது குறித்து அரசு திட்டவட்டமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறது.
இதையடுத்து இந்த அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவையை நடத்த விட மாட்டோம் என முலாயம் சிங்கின் சமாஜ்வாடிக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில் இந்தப் பகுதிகள் 'லீக்' செய்யப்பட்டுள்ளன. இதை மத்திய அரசே கசிய விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அமளி:
இந் நிலையில் லிபரான் கமிஷன் அறிக்கையின் குறிப்பிட்ட தகவல்கள் வெளியானது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அமளியில் ஈடுபட்டது.

அறிக்கையின் ஒரு சில பகுதிகள் மட்டும் வெளியானதற்கு காரணம் என்ன, தகவல்கள் எப்படி கசிந்தது என்று மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் அத்வானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

அறிக்கை விரைவில் தாக்கல்-சிதம்பரம்:
இந் நிலையில் மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நடப்பு கூட்டத் தொடரிலேயே லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அத்துடன் பாபர் மசூதி இடிப்பட்டது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையும் தாக்கலாகும் என்றார்.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:
பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் தகவல்கள் ஆங்கில நாளிதழில் வெளியானது எப்படி? என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ஆங்கில நாளிதழில் இன்று வெளியான செய்தியில், “பாபர் மசூதி இடிப்பு நிகழ்வை பாஜக தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்ட சிலர் திட்டமிட்டு தூண்டியதாக” லிபரான் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், லிபரான் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள தகவல்கள் ஊடகத்திற்கு சென்றது எப்படி என்றும் மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், “தனது அமைச்சரவையின் கீழ் உள்ள லிபரான் கமிஷன் அறிக்கையில் உள்ள தகவல்கள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடைய உள்ள டிசம்பர் 21ஆம் தேதி அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும்” எனக் கூறினார்.

இதனை ஏற்க மறுத்த பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய் - அத்வானி -ஜோஷிக்கு தொடர்பு: லிபரான் கமிஷன்"

கருத்துரையிடுக