சண்டீகரில் நேற்று நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நாட்டின் ஏற்றுமதி சரிவு குறித்து கேட்டதற்கு, இனிமேலும் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது. உள்நாட்டு தேவையை அதிகரிக்கச் செய்வதும் பிற வெளிநாடுகளைக் கண்டறிந்து ஏற்றுமதி செய்வதும்தான் நீண்ட கால தீர்வாக அமையும் என்றார்.
சர்வதேச தேக்க நிலையிலிருந்து ஆசிய நாடுகள் மீண்டு விட்டதாக இப்போதைக்குக் கூற முடியாது. இருப்பினும் அதற்கான அறிகுறிகள் அங்கொன்றும் இங்கொன்றும் தென்படுகின்றன.2007-ம் ஆண்டில் 5.1 சதவீதமாக இருந்த நாட்டின் பொருளாதர வளர்ச்சி 2008-ல் 3.1 சதவீதமாக சரிந்துவிட்டது. இதற்கு சர்வதேச பொருளாதார தேக்க நிலையே காரணம். 2007-ல் ஆசிய அளவில் 9.5 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2008-ல் 6.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. 2009-ல் இது 3.4 சதவீதமாகக் குறைந்தது என்றார்.
கிழக்காசிய நாடுகளில் குறிப்பாக சீனா, தேக்க நிலையிலிருந்து மீண்டு 4.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2010-ம் ஆண்டில் 7.1 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் தொழில் துறையை ஊக்குவிக்க அரசு அளித்த வரிச் சலுகையை திரும்பப் பெறுமுன் பல்வேறு விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
நடப்பு ஆண்டில் 6 சதவீதம் முதல் 7 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரிச் சலுகையைத் திரும்பப் பெற்றால் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால், மிகுந்த கவனத்துடன் இப்பிரச்னை கையாளப்படும் என்றார்.
பருவ நிலை மாற்றம்: புவி வெப்பமடைவது தொடர்பான பிரச்னை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. ஆனாலும் இது பொதுவான பிரச்னை என்பதை மறுப்பதற்கில்லை என்றார் பிரணாப் முகர்ஜி.
துபை வேர்ல்டு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து கருத்துத் தெரிவித்த பிரணாப் முகர்ஜி இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படாது என்று தெரிவித்தார். ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் தேவை என துபை வேர்ல்டு கேட்டுக் கொண்டுள்ளது.இதனால் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பெரும் சரிவைச் சந்தித்தது.
துபை வேர்ல்டு நிறுவனத்துக்கு இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன் அளவை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. துபை வேர்ல்டு நிறுவனத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ. 1,500 கோடி தொகையை குறுகிய கால கடனாக வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. மற்ற வங்கிகள் இதுபற்றிய விவரத்தைத் தெரிவிக்கவில்லை. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் செலுத்தும் பணத்தை இங்குள்ள உறவினர்கள் பெறுவதில் சிக்கல் இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் ஷியாமளா கோபிநாத் குறிப்பிட்டிருந்தார்.
துபை நிதி நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்படவில்லை. இப்போதைய சூழலில் இதுகுறித்து பீதியடையத் தேவையில்லை. ஏனெனில் துபை நிதி நிறுவனத்துக்கு இந்தியாவிலுள்ள வங்கிகள் அதிக அளவில் கடன் அளித்திருக்க வாய்ப்பில்லை. குறுகிய கால தாக்கமாக பங்குச் சந்தையில் சிறிது தாக்கம் ஏற்பட்டது. இதனால் நாட்டின் ஏற்றுமதி எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
மேலும் துபை வேர்ல்டு நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டு அன்னியச் செலாவணி பரிமாற்றம் பாதிக்கப்படக்கூடும். இதேபோல ரியல் எஸ்டேட் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனால் இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும். பெருமளவிலான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிவதால், இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்று இப்போதைக்குக் கூற முடியாது. இருப்பினும் இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதவில்லை.
துபையில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 43.3 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றார்.
துபையில் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 43.3 சதவீதம் பேர் இந்தியர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றார்.
source:inneram
0 கருத்துகள்: on "இனிமேலும் அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது - பிரணாப் முகர்ஜி"
கருத்துரையிடுக