கம்பம் : டென்மார்கில் ஐ.நா., சார்பில் வரும் டிச.,7ல் நடக்க உள்ள பருவ நிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி மாநாட்டில் கம்பத்தை சேர்ந்த மாணவர் பங்கேற்க உள்ளார்.
புவி வெப்பமயமாதல்,பேரிடர், சுற்றுப்புறச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் ஆகியவை குறித்து ஐ.நா., சார்பில் டென்மார்க், கோபன்கேனில் உலக நாடுகள் பங்கேற்கும் ஆராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது. வரும் டிசம்பர் 7 முதல் 18 வரை நடக்க உள்ள மாநாட்டில் 140 நாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 20 பேர் குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நூலகர் அம்சத் இப்ராஹிம்- ஹசீனாபேகம் தம்பதியினர் மகன் சலீம்கான்,சென்னையை சேர்ந்த ஆனந்தகுமார், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர் கூறுகையில்; "சென்னை அண்ணா பல்கலை.,யில் ஆராய்ச்சி மாணவனாக உள்ளேன். கடல் பகுதியில் மாங்குரோவ் மரங்கள் வளர்த்து சுனாமி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பு பெறலாம் என்ற ஆய்வு கட்டுரைக்காக ஐ.நா., விருது பெற்றிருக்கிறேன். கடல் பகுதியில் பவளப் பாறைகள் குறைந்து வருகின்றன. இவற்றை செயற்கையாக உருவாக்கலாம். இதனால் கடல் மாசுபடுவது குறையும். மீன்வளம் அதிகரிக்கும். இயற்கை பேரிடர்களை தடுக்க முடியாது. ஆனால் எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து டென்மார்க் மாநாட்டில் ஆராய்ச்சியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்" என்றார்.
source:dinamalar
0 கருத்துகள்: on "டென்மார்க் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்கும் கம்பம் மாணவர்"
கருத்துரையிடுக