19 டிச., 2009

கோபன்ஹேகன்: கடந்த 12 நாட்களாக நடந்த மாநாடு எந்த முடிவும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது

கோபன்ஹேகன் : வளர்ந்த நாடுகள் நச்சுப் புகையை குறைப்பது, வளரும் நாடுகளுக்கு நிதியுதவி கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை கண்டித்து, கோபன்ஹேகன் பருவநிலை மாற்ற மாநாட்டில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் தங்கள் குழுவுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால், மாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகையால் புவி வெப்பமடைந்து பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதை தடுப்பது பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ஐ.நா. சார்பில் 15&வது பருவநிலை மாநாடு நடந்தது. 7ம் தேதி தொடங்கிய இந்த மாநாட்டில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பருவநிலை மாற்றம் விவகாரத்தில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. கியாட்டோ மாநாட்டு தீர்மானத்தின்படி, நச்சுப் புகையை கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று வளரும் நாடுகள் கோரிக்கை வைத்தன. இதை வளர்ந்த நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. இந்த 10 நாள் விவாதத்தில் இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் ஒரே நிலையை எடுத்து ஓரணியாக நின்றன.

தலைவர்கள் பங்கேற்கும் கடைசி நாள் மாநாடு நேற்று நடந்தது. பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதமர் வென் ஜியாபோ, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்&கி&மூன் உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.

சீன பிரதமர் வென் ஜியாபோ பேசுகையில், “வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் வித்தியாசமான பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். நச்சுப்புகை வெளியிடுவது தொடர்பாக வளர்ந்த நாடுகள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். பருவநிலை மாற்றம் பற்றிய பிரச்னையை சீனா மிக கடுமையாக எடுத்துக் கொண்டுள்ளது. நச்சுப் புகை வெளியேற்றத்தில் நாங்கள் நிர்ணயித்த இலக்கை தாண்டிக் காட்டுவோம்’’ என்றார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசுகையில், “பருவநிலை மாற்றம் பற்றி உலக அளவில் உடன்பாட்டுக்கு வருவது நமது அனைவரின் கடமை. இதில் காலதாமதம் செய்ய நேரம் இல்லை. நாம் உடனடியாக செயல்பட்டாக வேண்டும். நச்சுப்புகை வெளியேற்றத்தை குறைப்பதை கண்காணிக்க உலகளவிலான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அதே நேரம், அது மற்ற நாடுகளின் இறையாண்மையில் தலையிடுவதாக இருக்கக் கூடாது. நச்சுப் புகையை குறைப்பதற்காக வளரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் கோடி நிதி தர தயார். அதற்கு நச்சுப் புகை குறைப்பில் ஒளிவு மறைவு இல்லாமை தொடர்பாக விரிவான ஒப்பந்தம் போட வேண்டும்’’ என்றார்


பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘கியாட்டோ மாநாட்டு தீர்மானங்களை ஏற்றுக் கொண்ட நாடுகள் நச்சுப் புகை அளவை குறைக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடு இந்தியா என்பதால் இங்கு நடைபெறும் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறோம். இந்தியா தானாக முன்வந்து அறிவித்தபடி 2005ம் ஆண்டு இருந்ததை விட 2020ம் ஆண்டு நச்சுப்புகை வெளியேற்றத்தை 20 சதவீதம் அளவுக்கு குறைத்துவிடும். சிக்கலான பணி நம்மை எதிர்நோக்கி காத்து இருக்கிறது. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து நடுநிலையான தீர்வு காண ஆக்க பூர்வமாக பணியாற்ற வேண்டும்’’ என்றார்.

கியோட்ட மாநாட்டு தீர்மானத்தை ஏற்கவேண்டும் என்ற வளரும் நாடுகளின் கோரிக்கையை வளர்ந்த நாடுகள் ஏற்கவில்லை. இதனால், முடிவு எதுவும் ஏற்படாமல் பேச்சு வார்த்தை இழுபறியானது. இதனால், பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் மாநாட்டில் இருந்து தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் வெளிநடப்பு செய்தனர். இதனால், கடந்த 12 நாட்களாக நடந்த மாநாடு எந்த முடிவும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது.

முக்கிய இரண்டு நாடுகளின் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததால் மாநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
source:dinakaran

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோபன்ஹேகன்: கடந்த 12 நாட்களாக நடந்த மாநாடு எந்த முடிவும் எடுக்காமல் தோல்வியில் முடிவடைந்தது"

கருத்துரையிடுக