உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
1992 ஆம் ஆண்டு ஹிந்துத்துவ பாசிஸ்டுகள் 463 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை தகர்த்தபொழுது வீழ்ந்தது முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் மட்டுமல்ல நமது தேசம் உயர்த்திப்பிடித்த மதிப்பீடுகளும், நம்பிக்கைகளும்தான் மினாராக்களோடு நிலத்தில் வீழ்ந்தது.
ஆட்சிக்கட்டிலிருந்தோர் பார்வையாளர்களாக மாறினர். சட்டம் காற்றில் பறந்தது. நீதிபீடம் தூக்கத்தில் ஆழ்ந்தது. நமது தேசத்தின் மதசார்பற்ற, ஜனநாயககொள்கைகள் எல்லாம் மண்ணுக்குள் புதையுண்டு போயின. மகாத்மா காந்திக்கொலைக்கு பிறகு சுதந்திர இந்தியா சந்தித்த மிக மோசமான நிகழ்வாகயிருந்தது பாப்ரி மஸ்ஜித் இடிப்பு.
இந்திய தேசம் உலகநாடுகளுக்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய சூழல் ஏற்பட்ட நாள். மகத்தான கலாச்சாரமும் சிறந்த பண்பாடும் கொண்ட தேசம் என்று நம்மால் பெருமையாகப்பேசப்படும் நமது நாடு சர்வதேச சமூகத்தின் முன்னால் களங்கப்படுத்தப்பட்ட தினம். அதுதான் டிசம்பர் 6.
இன்னொரு வகையில் கூறவேண்டுமென்றால் நம்முடைய நமது தேசத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் அரசியல் சட்டம் கிழித்தெறியப்பட்ட கறுப்பு தினம். அரசியல் சட்டத்தின் தந்தை பாபா சாகிப் அம்பேத்காரின் பிறந்த தினத்தை பாசிஸ்டுகள் பாப்ரி மஸ்ஜிதை இடிக்க தேர்ந்தெடுத்தது எதேச்சையான ஒன்றல்ல. மதவெறிப்பிடித்த ஒரு காவிக்கும்பலால் தன்னிச்சையாக ஒரு நாள் தகர்க்கப்பட்டது அல்ல பாப்ரி மஸ்ஜித். மிகவும் கவனமாக தீட்டப்பட்ட சதித்திட்டங்களும், வருடக்கணக்கில் மேற்கொண்ட தயாரிப்புகளும் பாப்ரிமஸ்ஜித் இடிப்பிற்கு பின்னால் உள்ளது.
இந்தியாவில் வாழும் 15 கோடி முஸ்லிம்களின் எதிர்காலமும், வாழ்வும் எவ்வாறிருக்கும் என்பதற்கான முன்னறிவிப்புதான் பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு. 420 வருடகாலம் முஸ்லிம்கள் அல்லாஹ்வை வணங்கி வந்த பள்ளிவாசலை தகர்த்தபிறகு ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் எக்காளமிட்டது இந்தியாவின் அவமானச்சின்னத்தை துடைத்தெறிந்துவிட்டோமென்று. இதன் பொருள் இந்தியாவின் மீது படிந்துள்ள கறை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் என்பதுதான். அதாவது அழிக்கப்படவேண்டியது பள்ளிவாசல்மட்டுமல்ல இங்குள்ள அனைத்து முஸ்லிம்கள்தான் என்பதை ஒளிவு மறைவில்லாமல் தெளிவாக அறிவித்தார்கள் பாசிஸ்டுகள்.
இதற்கு உதாரணம்தான் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடனும் 1993 மும்பையிலும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள். ஏதேனும் அரசு நிர்வாகமோ நீதி பீடங்களோ தலையிட்டு இந்த இனப்படுகொலைகள் நிறுத்தப்படவில்லை. ஹிந்துத்துவா பாசிஸ்டுகளின் இரத்த தாகம் அடங்கியபின்னால்தான் அது நிறுத்தப்பட்டது.
பாப்ரியின் தகர்ப்பால் ஆறாத ரணங்களைக்கொண்ட இதயங்களுடன் வாழ்ந்த முஸ்லிம்களை மீண்டும் மீண்டும் வேட்டையாடினார்கள் சங்க்பரிவார பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் அரசு இயந்திரத்தின் முழு அதிகாரங்களையும் பயன்படுத்தி குஜராத்தின் முதல்வராகயிருந்த நரேந்திரமோடியின் முழு ஆசீர்வாதத்தோடு நடைபெற்ற மிகப்பெரும் கொடூர இனப்படுகொலைகள் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வரலாற்றில் மாபெரும் அத்தியாயமாக மாறியது. குஜராத்தின் தெருக்களில் முஸ்லிம்களின் இரத்த்த்தைக்கொண்டு ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் ஹோலி பண்டிகையை கொண்டாடியபொழுது பாப்ரி மஸ்ஜித் இடிப்பை உங்களால் மறக்கமுடியாதா என்று கேள்வி கேட்டவர்களின் குரல் அடங்கிப்போயிற்று. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் முடியப்போவதில்லை என்று சங்க்பரிவாரங்கள் குஜராத்தில் முழங்கிய முழக்கத்தைக்கேட்டு குஜராத் மட்டுமல்ல இந்திய தேசம் முழுவதும் பீதியால் உறைந்தது.
முஸ்லிம்களின் தலைவர்கள் பாப்ரி மஸ்ஜித் இடிப்பை மறப்பதற்கு முஸ்லிம்களிடம் இடைவிடாது உபதேசம் செய்துக்கொண்டிருந்தபொழுது ஒரு வேளை முஸ்லிம்கள் மறந்தால் கூட நாங்கள் மறக்கவிடமாட்டோம் என்று கூறி ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் குஜராத்தில் அமைப்புரீதியான இனவெறியின் கோர தாண்டவத்தை நிகழ்த்திக்காட்டினார்கள்.
கால ஓட்டத்தில் மறந்து போகும் நிகழ்வுகளல்ல பாப்ரி மஸ்ஜித் இடிப்பும், குஜராத் இனப்படுகொலையும். பாப்ரிமஸ்தின் நினைவலைகள் தீய சக்திகளை எதிர்த்துப்போராடும் உந்து சக்தியாக மாறும். வரலாற்றில் நடைபெற்ற நிகழ்வுகள் நமக்கு முன்மாதிரியாகும். நம்மை மறக்கச்செய்துவிட்டு தம்மை பலப்படுத்துவதுதான் பாசிஸ்டுகளின் திட்டம். இது மறுக்கமுடியாத உண்மை.
17 ஆண்டுகள் மராத்தான் விசாரணக்கு பிறகு தனது 900 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் நீதிபதி லிபர்ஹான். விசாரணைக்காக நீண்டகால அளவை எடுத்துக்கொண்டாலும் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ள உண்மைகள் ஹிந்துத்துவத்திற்கு மிதவாதம் தீவிரவாதம் என்று ஒன்றுமில்லை. அனைவருமே இதில் பங்காளிகள். தங்களது இலட்சியத்தை அடைவதற்கு சங்க்பரிவாரம் அரசியல் சட்டம், நீதிமன்றம் என எதையும் ஏமாற்ற தயாராகயிருப்பார்கள் என்பதையே.
லிபர்ஹானின் விசாரணை கமிசன் குற்றவாளிகளை பட்டியல் போட்டாலும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்பதையே காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களில் அமைக்கப்பட்ட எந்த விசாரணை கமிசனுக்கு இவர்கள் நடவடிக்கை மேற்க்கொண்டார்கள்? அறிக்கைகள் கிடப்பில் போடப்படுவதுதான் மிச்சம். இதுதான் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அக்கிரமங்களுக்கு கிடைக்கும் நீதி. உண்மையில் இந்தியாவின் நீதி நிர்வாகத்தின் மீது நம்பிக்கைக்கொண்ட அரசாகயிருந்தால் லிபர்ஹான் கமிசனில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகள் அனைவரையும் சிறையிலடைக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மஸ்ஜிதை மட்டும் தகர்க்கவில்லை. மாறாக இந்தியாவின் அரசியல் சட்டம்,நீதி, மதசார்பின்மை என அனைத்து கட்டமைப்புகளையும் தகர்த்துள்ளார்கள்.
அதுமட்டுமின்றி பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பின் நடந்த இனப்படுகொலைகள் அனைத்திற்கும் காரணகர்த்தாக்களாக விளங்கியுள்ளார்கள். இத்தகைய தேசத்துரோகிகளுக்கு இந்நாட்டில் வழங்கப்படும் உச்சபட்ச தண்டனையை (Capital Punishment) வழங்கவேண்டும். மீண்டும் அதே இடத்தில் பாப்ரி மஸ்ஜிதை கட்டித்தரவேண்டும். அதுதான் முஸ்லிம்களின் ரணமாக்கப்பட்ட இதயங்களுக்கு கிடைக்கும் ஆறுதல். இல்லாவிட்டால் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டியெழுப்ப முஸ்லிம் சமூகம் தயாராகவேண்டும். இதற்கு ஒரே வழி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை எல்லா வகையிலும் பலப்படுத்துவதே! இதன்மூலம் பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதோடு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதி, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிச்செய்யவும் இன்ஷா அல்லாஹ் எம்மால் இயலும்!
"முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; சகித்துக் கொள்ளுங்கள்; பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!" (அல் குர்ஆன் 3:200)
"..அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.” (அல் குர் ஆன்2:251)
--தூதன்--
0 கருத்துகள்: on "பாப்ரி மஸ்ஜித்: ஆறாத ரணம், உயிர்தெழலின் அடையாளம்"
கருத்துரையிடுக