13 டிச., 2009

இஸ்ரேல் துருக்கியின் வான்பரப்பை அத்துமீறிப் பயன்படுத்த முற்படுமாயின் அதன் விளைவு கடுமையாக இருக்கும்: அர்தூகான்

இஸ்தான்புல்: இஸ்ரேல் துருக்கியின் வான்பரப்பைத் துஷ்பிரயோகம் செய்ய முற்படுமாயின் தமது நாடு எடுக்கும் எதிர்நடவடிக்கை ஒரு பெரும் பூகம்பமாய் வெடிக்கும் என்று துருக்கியப் பிரதமர் ரஜப் தையிப் அர்தூகான் கடுமையாக எச்சரித்துள்ளார்.

துருக்கியுடனான கூட்டு இராணுவப் பயிற்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, அண்மையில் ஈரானை உளவுபார்க்கும் பொருட்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் துருக்கிய வான்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்தமை தான் காரணம் என்று சொல்லப்படும் செய்தியின் உண்மைத்தன்மை பற்றி எகிப்திய ஊடகவியலாளர் ஃபஹ்மி ஹுவைதி எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்குமுகமாகவே அர்தூகான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அர்தூகான் தொடர்ந்து பேசுகையில், அந்தத் தகவலில் எவ்வித உண்மையுமில்லை. ஆனால், இஸ்ரேல் அவ்வாறு செய்ய முற்படுமாயின், அதற்கான எதிர்வினை ஒரு பூகம்பத்தை எதிர்கொள்வதை ஒத்ததாக இருக்கும் என்று கருத்துரைத்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் காஸாவுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, அங்குள்ள மக்களை அழித்தொழிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. காஸாவில் செய்யக்கூடிய அட்டூழியங்களையெல்லாம் செய்ததற்குப் பின்பும், தன்னுடனான இராணுவப் பயிற்சிக்காகத் துருக்கி இஸ்ரேலை அனுமதிக்கும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்கிடமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

"தமது விருப்பங்களுக்கு மதிப்பளித்து ஆட்சிசெய்வதற்காகவே மக்கள் எமது அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். காஸாவில் இடம்பெற்ற அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் எமது மக்கள் உணர்வுரீதியாக மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவே, எம்மால் துருக்கிய மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு செயற்பட முடியாது.

பொதுவாக நாம் எடுக்கும் தீர்மானங்களைப் பொறுத்தவரையில், அவை துருக்கிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதைப் பிரதானமாகக் கொண்டே அமைவதால், துருக்கியுடனான இராணுவப் பயிற்சிக்கு இஸ்ரேலை அனுமதிப்பதில்லை என்ற தீர்மானமும் அந்த அடிப்படையில்தான் எடுக்கப்பட்டுள்ளது" என்பதை துருக்கியின் பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.

"அத்துடன், இஸ்ரேல் எம்முடன் கொண்டுள்ள அரசியல் தொடர்பினை மற்றோர் தரப்பினர் மீது அத்துமீறிய ஆக்கிரமிப்பினை நடத்துவதற்கான அனுமதிச் சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், அவர்களின் விடயத்தில் நாம் தலையிடாமலோ அல்லது அவர்களுக்குப் பக்கசார்பாகவோ இருப்போம் என்று இஸ்ரேல் எதிர்பார்ப்பதும் தவறானது" என்றும் அர்தூகான் விளக்கினார்.

source:PIC

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேல் துருக்கியின் வான்பரப்பை அத்துமீறிப் பயன்படுத்த முற்படுமாயின் அதன் விளைவு கடுமையாக இருக்கும்: அர்தூகான்"

கருத்துரையிடுக