குவைத்: இந்தியா ஃபெடரனிடி ஃபாரம் குவைத் சார்பாக கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி "ஒட்டுமொத்த பலப்படுத்துதலை நோக்கி" என்ற தலைப்பில் சிறப்புரையும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர் ஷக்கீல் அஹ்மத் வரவேற்புரை நிகழ்த்தினார். சகோதரர் அப்துஸ்ஸலாம் பங்க் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு தலைமையேற்றவர் குவைத் இந்தியா ஃபெடரனிடி ஃபாரம் தலைவர் சகோதரர் முஹியித்தீன் மாஸ்டர். தாயகத்திலிருந்து வருகைதந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது: "வரலாற்றில், இந்தியாவின் கலாச்சார, பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் முக்கிய காரணமாகவும் இருந்தவர்கள் முஸ்லிம்கள். இந்தியாவை நீண்டகாலம் ஆட்சிபுரிந்த பெருமைக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள் எதிர்பாராதவிதமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக உள்ளனர். இது சச்சார் கமிஷன் அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எந்த அரசியல் கட்சியும் முஸ்லிம்களின் பிற்படுத்தப்பட்ட நிலையை மாற்றிட முயலவில்லை.
இந்த அரசும் சச்சார் மற்றும் மிஸ்ரா கமிசனை நியமித்ததோடு சரி சிறுபான்மை மக்களை சமூகத்தில் கைதூக்கிவிடக்கூடிய எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை. ஒரு துணிவான அரசாங்கத்தால்தான் பிற்படுத்தப்பட்டோருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட மிஸ்ரா கமிசனின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க இயலும். இந்திய முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக பலப்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம் மற்றும் இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனுடைய அல்லது சமூகத்தினுடைய தேவைகளை நிறைவுச்செய்வதில்தான் நமது நாட்டின் உண்மையான முன்னேற்றம் அடங்கியுள்ளது.
மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவீதம் இருக்கும் முஸ்லிம்களை அரசு புறக்கணிக்கக்கூடாது. பாப்ரி மஸ்ஜிதை இடித்த ஹிந்துத்துவா பாசிஸ்டுகள் வெறும் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க, மத ரீதியான கட்டிடத்தை மட்டும் தகர்த்துவிடவில்லை மாறாக இந்தியாவின் மதச்சார்பின்மையையே தகர்த்துள்ளார்கள். 17 ஆண்டுகளுக்கு பிறகு லிபர்ஹான் கமிசன் விசாரனை அறிக்கை முடிந்து பாராளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசு முஸ்லிம் சமூகத்தையும் ஏன் இந்தியாவில் வாழும் ஜனநாயகத்தையும், மதசார்பின்மையும் நம்பும் இதர குடிமக்களையும் நம்பிக்கை இழக்கும் வகையில் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
ஜனநாயக நாட்டில் ஒரு சமூகம் தன்னை முன்னேற்றிக் கொள்ள அரசியலில் பலம்பெறுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அரசியலில் இந்திய முஸ்லிம்கள் தலித்களை பார்த்து பாடம் பெறவேண்டும். தேசிய நலனைக்கருத்தில் கொண்ட இந்திய அளவிலான முஸ்லிம் மதசார்பற்ற கட்சி இதுவரை இல்லை. இந்த இடைவெளியை புதிதாக துவக்கப்பட்டுள்ள சோசியல் டெமோக்ரேடிக் பார்டி(S.D.P.I) பூர்த்திச்செய்யும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நம்புகிறது. மேலும் நாங்கள் S.D.P.I க்கு ஆதரவினை தெரிவித்துள்ளோம்.
முஸ்லிம் சமூகம் தன்னை எல்லாத்துறைகளிலும் பலப்படுத்திக்கொள்ளவேண்டும். சமூகத்தை ஒட்டுமொத்தமாக பலப்படுத்தல்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உயர்ந்த இலட்சியம். மேலும் மக்களின் அடிப்படைத்தேவைகளான கல்வி, தொழில் உள்ளிட்டவற்றை நிறைவுச்செய்வதும், அரசியல் சட்டம் வழங்கும் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சம உரிமை ஆகியவற்றை உறுதிச்செய்வதும் ஆகும்". இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற கலந்துரையாடலுக்கு சகோதரர் சைபுதீன் தலைமையேற்றார்.
0 கருத்துகள்: on "ஒட்டுமொத்த பலப்படுத்துதல் காலத்தின் கட்டாயம்: இ.எம்.அப்துற்றஹ்மான்"
கருத்துரையிடுக