புதுடெல்லி: மத்திய அரசின் மதக்கலவர தடுப்பு மசோதா மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருக்கிறது என பா.ஜ. மற்றும் அதன் கூட்டணி கட்சியான அகாலி தளம் ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மதக்கலவர தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு மசோதாவுக்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த மசோதாவுக்கு பா.ஜ. மற்றும் அகாலிதளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஏதேனும் ஒரு மாநிலத்தில் மாநில போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மதக்கலவரம் கையை விட்டு மீறும் போது மத்திய அரசு தலையிட இந்த மசோதா வகை செய்கிறது.
பொதுவாக சட்டம் ஒழுங்கு பிரச்னை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. பெரிய கலவரங்கள் ஏற்படும் போது மாநில அரசு கேட்டுக் கொண்டால் மட்டும் மத்திய அரசு தனது படைகளை அனுப்பி வைக்கும். மதக்கலவர மசோதா சட்டமாக்கப்பட்டால் மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு நேரடியாக தலையிட்டு கலவரத்தை அடக்க முடியும். மேலும் புலன் விசாரணையும் செய்ய முடியும்.
புதிய மசோதாவில் உள்ள இந்த ஷரத்துக்களை பா.ஜ.வும், அகாலிதளமும் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த மசோதா இந்திய அரசின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக மாநிலங்களவை பா.ஜ. தலைவர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அகாலி தள தலைவரும், பஞ்சாப் மாநில துணை முதல்வருமான சுக்பீர் பாதலும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி மறுத்துள்ளார்.
source:dinakaran
0 கருத்துகள்: on "மத்திய அரசின் மதக்கலவர தடுப்பு மசோதாவுக்கு பா.ஜ. கடும் எதிர்ப்பு"
கருத்துரையிடுக