30 ஜன., 2010

பாக். வீரர்கள் விவகாரம்: ஷாருக்கானுக்கு சிவசேனா மிரட்டல்; பாதுகாப்போம்- மகா. அரசு

மும்பை: பாகிஸ்தான் வீரர்களை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷாருக்கான் சேர்த்தால், அதன் பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரித்துள்ளார். ஆனால் ஷாருக் கானுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என மகாராஷ்டிர அரசு உறுதியளித்துள்ளது.

பாகிஸ்தான் வீரர்களை அணியில் சேர்க்காதது தவறு என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக் கான் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிக்கையில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

முடிந்தால் தனது அணியில் பாகிஸ்தான் வீரர்களை ஷாருக் சேர்க்கட்டும். ஆனால் அதன் பின்னர் ஏற்படும் பின் விளைவுகளை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்தார்.

அக்கட்சியின் சர்ச்சை எம்.பியான சஞ்சய் ராத் கூறுகையில்,
பாகிஸ்தான் வீரர்கள் இங்கே விளையாட வேண்டும் என்று ஷாருக் கான் விரும்பினால், அவர்களுடன் விளையாடுவதற்கு அவர் கராச்சி, இஸ்லாமாபாத்துக்கு செல்ல வேண்டும். தைரியம் இருந்தால் உங்கள் அணியில் பாகிஸ்தானிய வீரர்களை சேருங்கள். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று எச்சரித்திருந்தார்.

மேலும், ஷாருக் கானுக்கு எதிரான போராட்டங்களையும் சிவசேனாவினர் தொடங்கி விட்டனர். ஷாருக் நடித்து அவரது மனைவி கவுரி, தயாரித்துள்ள, மை நேம் இஸ் கான் படம் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் வெளியாக உள்ள மும்பை தானே எடர்னிட்டி மாலுக்கு சிவசேனா கட்சி தொண்டர்கள் படையெடுத்து சென்றனர். அங்கிருந்த சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர். படத்தை வெளியிடக்கூடாது, இதை மீறி வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மால் நிர்வாகத்தை எச்சரித்துக் கடிதம் கொடுத்து விட்டுச் சென்றனர். ஷாருக் கான் மீது பாய்ந்திருக்கும் சிவசேனாவினரால் மும்பையில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் பக்வே செய்தியாளர்களிடம் கூறுகையில், ஷாருக் கான் தனக்குப் பாதுகாப்பு தேவை என்று விரும்பினால் அதை அளிக்க மகாராஷ்டிர அரசு தயாராக உள்ளது. ஷாருக் கான் மட்டுமல்லாது, ஐபிஎல் வீரர்கள் அனைவருக்கும் முழு அளவிலான பாதுகாப்பு வழங்கப்படும்.

ஷாருக் கான் அரசியல் பேசவில்லை. விளையாட்டு தொடர்பான கருத்தைத்தான் கூறியுள்ளார். இதில் அரசியலைக் கலக்க முயற்சிக்கக் கூடாது. சிவசேனா எதையோ ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்கள் மக்களைக் காப்பாற்றும் கடமையில் இருக்கிறோம். அதை செய்வோம் என்றார் பக்வே.

ஏற்கனவே மும்பை அனைவருக்கும் சொந்தம் என்று கருத்து தெரிவித்திருந்த முகேஷ் அம்பானியையும் பால் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாக். வீரர்கள் விவகாரம்: ஷாருக்கானுக்கு சிவசேனா மிரட்டல்; பாதுகாப்போம்- மகா. அரசு"

கருத்துரையிடுக