கடந்த டிசம்பர் 30 ஆம் நாள் வாரணாசியில் நடைபெற்ற ஆல் இந்தியா பெடரேசன் கோப்பையை வென்றதன் மூலம் 53 ஆண்டுகால டெல்லியின் கேரம் போட்டி வரலாற்றில் சாதனைப்பதிவுச்செய்துள்ளார் ஜமீல்.
இது ஜமீலின் முதல் பட்டமும் அல்ல.மாறாக கடந்த 30 வருடங்களாக டெல்லியின் சார்பாக பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டுள்ளார் ஜமீல். டெல்லியில் நிலவும் கடுமையான குளிரின் காரணமாகவோ என்னவோ மீடியாக்களும் அரசும் இவரை கண்டுக்கொள்ளவேயில்லை.
இந்த சாதனையை படைப்பதற்காக கடுமையாக உழைத்துள்ளார். சொந்தமாக வியாபாரம் செய்யும் ஜமீலுக்கு அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. மேலும் இவருக்கு எவரும் ஸ்பான்சர் செய்யவும் முன் வரவில்லை.
1979 ஆண்டிலிருந்து தொடர்ந்து மாநில அளவிலான, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுவரும் ஜமீல் இதுவரை ஜூனியர், ஒற்றையர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் 100 பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு டெல்லியில் சீலாம்பூர் என்ற முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் வசிக்கும் ஜமீல்
twocircles.net என்ற இணையதள இதழுக்கு அளித்த பேட்டியில், "இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வாகும். நான் இந்தப் பட்டத்தை பெறுவதற்காக கடந்த 32 வருடங்களாக கடும் முயற்சி எடுத்துவருகிறேன். டெல்லியைச் சார்ந்த ஒரு வீரர் இந்தப் பட்டத்தைப் பெறுவது இதுவே முதல் தடவையாகும். இதற்கு முன் பல வீரர்கள் இந்த போட்டியில் காலிறுதிக்கு தகுதிக்கான ஆட்டத்தை தாண்டியதேயில்லை. எனக்கு தற்ப்பொழுது 47 வயதாகிறது. இந்த வயதில் இப்பட்டத்தை வெல்வது பெரும்பாலும் முடியாத காரியமாகும். நான் இந்தப்பட்டத்தைபெறுவதற்கு காரணம் அல்லாஹ்வின் அருளாகும்."
டெல்லியின் 53 ஆண்டுகால கேரம் வரலாற்றில் முதன்முறையாக தேசியப்பட்டத்தை வென்றபிறகும் மாநில அரசு இவருக்கு விருதும் வழங்கவில்லை கெளரவிக்கவுமில்லை. டி.டி.எ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் 51 ஆயிரம் மதிப்புடைய செக்கை வழங்கியது, ஆனால் இந்நிகழ்ச்சியில் எந்தவொரு மாநில அரசியல் தலைவர்களும் கலந்துக் கொள்ளவில்லை. இந்தத்தொகை இவர் படைத்த சாதனைக்கு நிச்சயமாக போதுமானதன்று.
60 முறை டெல்லி ஒற்றையர், இரட்டையர் பட்டங்களை வென்றுள்ள ஜமீல் தனது 3 வது வயதிலேயே கேரம் விளையாடத் துவங்கியதாக குறிப்பிடுகிறார். வாரணாசிப்போட்டியில் அரை இறுதியில் சர்வதேச சாம்பியனை வென்றவரை தோற்கடித்துள்ளார் ஜமீல். வருகிற மார்ச் மாதத்தில் குவஹாத்தியில் நடைபெறும் தேசிய சாம்பியன்சிப்பில் காலிறுதியில் பங்கேற்றாலே போதும் இவர் சர்வதேச சாம்பியன்சிப்பில் கலந்துக்கொள்ள தகுதியைப்பெறுவார்.
"இந்த வயதில்(47) எனக்கு வேலை கிடைப்பது சந்தேகமே. ஆனால் பயிற்சியாளராக விரும்புகிறேன்" என்கிறார் ஜமீல். எந்த விளையாட்டானாலும் அதில் சாதனைபுரிபவர்களை ஊக்கப்படுத்துவதும் அவர்களுக்கு விருது வழங்கிக் கெளரவப்படுத்துவதும் அரசின் கடமையாகும். ஆனால் ஜமீலுக்கு இழைக்கப்பட்டது அநீதமாகும். இது ஊடகங்களுக்கும் பொருந்தும்.
source:twocircles.net
0 கருத்துகள்: on "கேரம் விளையாட்டில் வரலாற்றுச் சாதனைப் படைத்த ஜமீல் விருதும் இல்லை விளம்பரமும் இல்லை"
கருத்துரையிடுக