புதுடெல்லி:நாட்டில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான விசாரணைக் கைதிகளை விடுதலைச் செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை துவங்கியுள்ளது.
சிறிய வழக்குகளில்(petty) கைது செய்யப்பட்டவர்களின் விசாரணை நேற்று துவங்கியது. அடிசனல் சீஃப் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் அஜய் பாண்டியா நேற்று 40 வழக்குகளின் வாதத்தை கேட்டார். டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையை நேரில் காண்பதற்காக சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொயிலியும், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மடான் பி லோக்கூரும் வந்திருந்தனர்.
நாட்டில் இரண்டு லட்சம் அளவிலான விசாரணை கைதிகளில் 70 சதவீதம் பேரையும் விடுதலைச் செய்ய இந்த ஆண்டு குடியரசு தினத்தில் மத்திய அரசு தீர்மானித்திருந்தது. விசாரணைக் கைதிகளை விடுதலைச்செய்வது அல்லது ஜாமீனில் விடுவது என்பதுதான் திட்டம். இந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கைதிகளில் மூன்றில் இரண்டு பாகத்தினரையும் விடுதலைச் செய்வதுதான் திட்டம். இது பல்வேறு மாநில அரசுகள், மாநில உயர்நீதிமன்றங்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும் என சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
ஆனால் ஜம்மு-கஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது. நிரம்பி வழியும் சிறைகளில் நெருக்கடியை மாற்ற இத்திட்டம் உதவும். இரண்டு லட்சம் பேர் இருக்கவேண்டிய இந்தியாவிலிலுள்ள 15 ஆயிரம் சிறைகளில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி மாநில அரசு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 700 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளித்துள்ளது. குற்ற நடவடிக்கைச் சட்டம் 432ஆம் பிரிவின்படி இந்த மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சிறைக் கைதிகளின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு என்று லெஃப்டினண்ட் கவர்னர் தேஜிந்தர் கன்னா கூறுகிறார்.
10 வருடத்திற்கு மேலாக சிறையிலிருப்பவர்களுக்கு இரண்டு மாதமும், 5 வருடத்திற்கு மேலாக சிறையிலிருப்பவர்களுக்கு ஒன்றரை மாதமும் சலுகையளிக்க அரசு தீர்மானித்துள்ளது. ஒரு வருடத்திற்கு குறைவாக தண்டனைப் பெற்றவர்களுக்கு 15 நாள்கள் சலுகையளிக்கப்படும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "விசாரணைக் கைதிகளின் விடுதலை: நடவடிக்கை துவங்கியது"
கருத்துரையிடுக